திருப்புவனம்: அதிமுக குறித்து விமர்சித்து பேசிய விஜய்யை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற தவெக இரண்டாவது மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய், ‘எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக இன்றைக்கு எப்படி உள்ளது. அந்த தொண்டர்கள். பாவம் யாருக்கு ஓட்டுப்போடுவது என தள்ளாடி நிற்கின்றனர்’ என பேசியிருந்தார்.
இதற்கு அதிமுக தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தனர். விஜய் பேச்சை கண்டித்து அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் மணலூர் மணிமாறன் சார்பில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், ‘நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை... நிறம் மாற அதிமுக தொண்டர்கள் பச்சோந்திகள் அல்ல. உயர்வோ தாழ்வோ என்றும் அதிமுகவில் தான். அண்ணன் எடப்பாடியார் வழியில் தான்...’’என குறிப்பிடப்பட்டு இருந்தது.