கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம்தேதி விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அனுப்பி சம்மனை ஏற்று, கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த கோவையை சேர்ந்த இந்துஸ்தான் ஜனதா கட்சி மாவட்ட அமைப்பாளர் ராகுல் காந்தி, நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் பகுதியை சேர்ந்த தேமுதிக ஒன்றிய நிர்வாகி நாவலடி, ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ராம்குமார், கரூர் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் செந்தில்குமார், கரூர் நொய்யல் பகுதியை சேர்ந்த விவசாயி கோகுலக்கண்ணன், ஆகியோர் நேற்று காலை 10 மணியளவில் சிபிஐ விசாரணை அலுவலகத்தில் தனித்தனியாக ஆஜராகினர்.
பிற்பகல் 2 மணி வரை அவர்களிடம் விசாரணை நடந்தது. இதில் அவர்கள் அளித்த வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
‘சிபிஐ விசாரணை சரியாக நடக்கவில்லை’
சிபிஐ விசாரணை முடிந்து வெளியே வந்த கோவையை சேர்ந்த இந்துஸ்தான் ஜனதா கட்சி மாவட்ட அமைப்பாளர் ராகுல்காந்தி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கரூர் துயர சம்பவம் குறித்து புகார் அளித்ததன் பேரில் என்னை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்பேரில் இன்று (நேற்று) ஆஜரானேன். தவெக கூட்ட நெரிசலுக்கு காரணமாக இருந்த விஜய் பெயரை எப்ஐஆரில் பதிவு செய்ய கூறி இருந்தேன். தவெக மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டேன். நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஐ அதிகாரிகள் கூறினார்கள்.
புகார் எங்கெல்லாம் கொடுத்திருக்கிறீர்கள் என சிபிஐ அதிகாரிகள் கேட்டார்கள். அதனை நான் விளக்கமாக கூறினேன். மேலும் விசாரணைக்கு தேவைப்பட்டால் வரவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். சிபிஐ விசாரணையை பொருத்தவரை பாதிக்கு பாதி தான் சரியாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


