Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உழவர் பாதுகாப்பு திட்ட நிதி கையாடல் செங்கல்பட்டு தாசில்தார் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு: கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள் சிக்கின

விழுப்புரம்: முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்ட நிதி கையாடல் புகார் தொடர்பாக செங்கல்பட்டு பேரிடர் மேலாண்மை தாசில்தார் சுந்தர்ராஜனுக்கு சொந்தமான விழுப்புரத்தில் உள்ள 2 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. விழுப்புரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2015 முதல் 2017 வரை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றியபோது முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்ட நிதியில், விபத்து இழப்பீடு, இயற்கை மரணம், திருமணம், கல்வி உதவித்தொகை போன்றவற்றில் லட்சக்கணக்கில் கையாடல் செய்தது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதற்கு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேவிகா, இடைத்தரகர் முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து தாசில்தார் சுந்தர்ராஜன் உள்ளிட்ட 3 பேர் மீதும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் 8 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்பி தேவநாதன் தலைமையில் 4 குழுக்கள், 3 பேரின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். தாசில்தார் சுந்தர்ராஜனுக்கு சொந்தமான அரசு ஊழியர் நகர் மற்றும் மந்தகரை கீழ்செட்டி தெருவில் உள்ள 2 வீடுகளிலும் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டில் சொத்து ஆவணங்கள், நகைகள், மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட கோடிக்கணக்கிலான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் செல்வராஜ் நகரில் உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் தேவிகா, தாதம்பாளையத்தில் உள்ள இடைத்தரகர் முருகன் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தாசில்தார் வீட்டில் காலை தொடங்கிய சோதனை மாலை 4 மணிவரை நீடித்தது. விழுப்புரத்தில் அரசு நிதி கையாடல் புகாரில் தாசில்தார் உள்ளிட்டவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

* 18 வயதில் பணியில் சேர்ந்தவர்

தாசில்தார் சுந்தர்ராஜன், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூரை சேர்ந்தவர். இவரது தந்தை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியபோது உயிரிழந்ததால், சுந்தர் ராஜனுக்கு கருணை அடிப்படையில் 18 வயது நிரம்பியதும் வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் பணி கிடைத்தது. தொடர்ந்து வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர் என்று அடுத்தடுத்து பதவி உயர்வில் வந்து நீண்ட காலமாக தாசில்தாராக உள்ளார். தொடர்ந்து அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அடுத்தகட்ட பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படவே நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

* கையாடல் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

விழுப்புரம் சமூக நலத்துறை தாசில்தாராக பணியாற்றிய சுந்தர்ராஜன், இடமாறுதல் உத்தரவு வருவதை முன்கூட்டியே அறிந்து ஒரே நாளில் 1,238 முதியோர் உதவித்தொகை ஆணை வழங்க உத்தரவு போட்டதாக தெரிகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட தாசில்தாரின் ஐடியில் இந்த உதவித்தொகை ஆணையை போட்டுவிட்டு சென்றாராம்.

இதற்காக ஒவ்வொரு ஆணைக்கும் குறைந்தது ரூ.5 ஆயிரம் வசூலித்ததாக கூறப்படுகிறது. புதிதாக பதவியேற்ற தாசில்தார் என்னுடைய ஐடியில் எப்படி இவ்வளவு ஆணைகளை போடலாம் என்று அவரிடம் கேட்க, இருவருக்கும் பிரச்னை அதிகரித்து உயர் அதிகாரிகளிடம் சென்றுள்ளது. அதன்பிறகுதான் அவர் பணியாற்றிய காலக்கட்டத்தில் பல்வேறு திட்டங்களில் பணம் கையாடல் நடந்திருப்பது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் தெரியவந்ததாம்.