வியன்னா: வியன்னா ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் வியன்னா ஒபன் ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், அரை இறுதிப் போட்டி ஒன்றில் இத்தாலி வீரர் லொரென்ஸோ முஸெட்டியை (23) வீழ்த்தி, ஜெர்மனியை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (28) இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரை இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர் (24), ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸ் டிமினாரை (26) வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், சின்னர் - ஸ்வெரெவ் இடையிலான இறுதிப் போட்டி நேற்று முன்தினம், இந்திய நேரப்படி இரவில் நடந்தது. போட்டியின் துவக்கம் முதல் அற்புதமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய சின்னர், 6-3 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய சின்னர், வியன்னா ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ. 5.27 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
