Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீடியோ வெளியிட்டது ‘ப்ளூ ஆரிஜின்’ விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர்: தேசிய கொடியை காட்டி மகிழ்ச்சி

புதுடெல்லி: விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியரான கோபிசந்த் தோட்டகுரா, இந்திய தேசிய கொடியை காட்டி மகிழ்ச்சியை ெதரிவித்தார். உலகப் பணக்கார்களில் ஒருவரும், ‘அமேசான்’ நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ், ‘புளூ ஆர்ஜின்’ என்ற விண்வெளிச் சுற்றுலா நிறுவனத்தை 2000ம் ஆண்டில் ஆரம்பித்தார். இந்நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான ஆலன் ஷெப்பர்ட் பெயரில் ‘நியூ ஷெப்பர்ட்’ என்ற பிரத்யேக விண்வெளி சுற்றுலா ராக்கெட்டை வடிவமைத்தது.

இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட நியூ ஷெப்பர்ட் என்எஸ்-22 ராக்கெட், விண்வெளிச் சுற்றுலாவிற்குத் தயாராகி ஆறு பேர் கொண்ட குழுவுடன் கடந்த சில தினங்களுக்கு முன் விண்ணை நோக்கிப் பறந்தது. பூமியிலிருந்து 62 கிலோ மீட்டர் உயரம் சென்று, துணைச் சுற்றுப் பாதையிலிருந்து பூமியின் வெளி, புவியீர்ப்பு விசை அற்ற நிலை, ராக்கெட் பயணம் ஆகியவற்றை அனுபவித்துவிட்டு இக்குழு மீண்டும் பூமிக்குத் திரும்பிவிடும்.

இக்குழுவில் இடம்பெற்றிருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த கோபிசந்த் தோட்டகுரா, விண்வெளிச் சுற்றுலா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ப்ளூ ஆரிஜின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்ட வீடியோவில், கோபிசந்த் தோட்டகுரா விண்வெளியில் இருக்கும்போது அவரது கையில் இந்தியக் கொடியைக் காட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அப்போது கேமரா முன்பு தோன்றிய கோபிசந்த் தோட்டகுரா, ‘இந்த கிரகத்தின் சுற்றுச்சூழல் நாயகன் நான்’ என்று எழுதப்பட்ட அட்டையைக் காட்டுகிறார். பின்னர் அவர் விண்கலத்தில் மிதக்கும் மூவர்ணக் கொடியைக் காட்டினார். மேலும், ‘மிகவும் அதிசயமாக இருக்கிறது. இதனை உங்கள் கண்களால் பார்க்க வேண்டும். விண்வெளியைப் பார்ப்பது என்னால் விவரிக்க முடியவில்லை. எல்லோரும் விண்வெளிக்குச் செல்ல வேண்டும். பூமியை அதன் மறுபக்கத்திலிருந்து பார்ப்பதற்கு நன்றாக உள்ளது’ என்றார்.