இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதி யார் ? : செப்டம்பர் 9, 2025 அன்று தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
டெல்லி : இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதி தேர்வு செய்யும் தேர்தல் செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 21ம் தேதி, ஜகதீப் தன்கர் தனது உடல்நலக் காரணங்களால் துணை ஜனாதிபதிபதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்த அரசியலமைப்புச் சட்டப்படி 60 நாட்கள் காலக்கெடு உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டது. அந்த கால அட்டவணையின்படி செப்டம்பர் 9ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவோர் ஆக. 7-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
முக்கிய கால அட்டவணை:
*வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஆகஸ்ட் 21, 2025
*வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்: ஆகஸ்ட் 23, 2025
*தேர்தல் தேதி: செப்டம்பர் 9, 2025
*அதே நாளில் வாக்குகளின் எண்ணிக்கையும் முடிவுகளும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று துணை ஜனாதிபதியை தேர்வு செய்வர்.
இதனிடையே ஆளுங்கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால் பாஜக நிறுத்தும் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மக்களவையில் 542 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 240 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர். இரு அவைகளிலும் பாஜக கூட்டணிக்கு 427 பேர் உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு 355 பேர் உள்ளனர். மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 293 பேர், மாநிலங்களவையில் 134 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணிக்கு மக்களவையில் 249 பேர், மாநிலங்களவையில் 106 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 392 வாக்கு தேவைப்படும் நிலையில், பாஜக கூட்டணிக்கு 427 பேர் ஆதரவு உள்ளது.