Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: பதிலளிக்க நான்கு வாரம் கெடு

புதுடெல்லி: தமிழ்நாடு பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றம் செய்து பத்து சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரல் 9ம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தது. இதைத்தொடர்ந்து துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.

மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு, “துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தனர். இதில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்த வழக்கை கோடைக்கால விடுமுறைக்கு பிறகு விசாரிப்பதாக தெரிவித்திருந்தது.

மேற்கண்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், ‘‘துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு எதிரான மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எங்களது தரப்பு மனு மீது பதிலளிக்கவோ அல்லது தமிழ்நாடு அரசு தங்களது தரப்பு வாதங்களை முன் வைக்கவோ எந்தவித வாய்ப்பும் வழங்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் தொடுத்திருந்த இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்து உத்தரவை பிறப்பித்தது சட்டத்துக்கு புறம்பானது. இந்த இடைக்கால உத்தரவால் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இது மேலும் காலதாமதத்தை ஏற்படுகிறது. எனவே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது யுஜிசி தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யக்கோரி முன்னதாக மனு தாக்கல் செய்து விட்டு, பின்னர் உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடை கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வேண்டுமானால் அதனை திரும்ப பெற்று கொள்ள உத்தரவிடவேண்டும்” என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்குக்கு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி, யுஜிசி மற்றும் அனைத்து எதிர்மனுதாரர்களும் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வேண்டுமெனில் அடுத்த விசாரணையின் போது, இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை விதிப்பது குறித்து விவாதிக்கலாம்” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.