மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்ற வெண்காட்டீஸ்வர் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது: 6ம் தேதி தேர் திருவிழா
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்பாள் சமேத வெண்காட்டீஸ்வரர் கோயிலில் 11 நாள் பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுராந்தகம் நகரில் வரலாற்ற பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்பாள் சமேத வெண்காட்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொங்கியது. ஜூன் 10ம் தேதி வரை 11 நாட்களுக்கு இந்த விழா நடக்கிறது. இதையொட்டி கோயில் வளாகம் வண்ணவிளக்கள், மலர்கள் மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விழாாவை முன்னிட்டு இன்று அதிகாலையில் மீனாட்சி அம்பாள், வெண்காட்டீஸ்வரர் சன்னதிகளில் அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயில் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து ெகாண்டனர். பின்னர் கொடி மரம், வெண்காட்டீஸ்வரர், மீனாட்சி அம்பாள், விநாயகர், முருகன் சன்னதிகளில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்பாள் சமேத வெண்காட்டீஸ்வரர் சுவாமிகளின் வீதியுலா நடந்தது.
விழாவை முன்னிட்டு தினமும் பஞ்சமூர்த்தி புறப்பாடு, சூரிய பிறை, அதிகார நந்தி, அன்ன வாகனம், யாழி வாகனம், சிம்ம வாகனம், திருக்கல்யாணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் 5ம் தேதி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும் 6ம் தேதி நடக்கிறது. மேலும் குதிரை வாகனம், பஞ்சமூர்த்தி புறப்பாடு, நடராஜர் உற்சவம், மஞ்சள் நீர் வீதியுலா, தீர்த்தவாரி, விடையாற்றி சங்காபிஷேகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் 10ம் தேதிவரை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மேற்பார்வையில், கோயில் அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.