விவசாயத்தில் முக்கிய பிரச்னை மார்க்கெட்டிங்தான். இதில் வெற்றி பெறுபவர்கள்தான் விவசாயத்தில் பெரிய அளவிலான லாபத்தைப் பார்க்க முடியும். இதற்கு உதாரணமாக திகழ்கிறார் தஞ்சை மாவட்டம் பொய்யுண்டார்கோட்டை, வாண்டையார்தோப்பு பகுதியை சேர்ந்த முருகேசன். இவர் தனது 10 ஏக்கர் நிலத்தில் காய்கறிப் பயிர்களைப் பயிரிட்டு, அதில் கிடைக்கும் விளைச்சலை சுற்றியுள்ள ஊர்களில் நடைபெறும் சந்தைக்கு எடுத்துச் சென்று மக்களிடம் நேரடியாக விற்றுவிடுகிறார். இதன்மூலம் நல்ல லாபம் பார்த்து வரும் முருகேசனைச் சந்தித்தோம். `` எங்கள் அப்பா புஷ்பராஜ் 25 வருடங்களுக்கு முன்பு சில பயிர்களை சாகுபடி செய்தார். பெரிய லாபம் இருக்காது. இதனால் நான் ஏதாவது மாற்றுப்பயிர் செய்யலாம் என யோசித்தேன். எங்களிடம் இருக்கும் 10 ஏக்கர் நிலத்தில், பகுதி பகுதியாக பிரித்து காய்கறிகள் பயிர் செய்யலாம் என திட்டமிட்டேன். எந்தப் பயிர்களில் நல்ல லாபம் கிடைக்கும் என ஆராய்ந்து அதை பயிர் செய்யத் தொடங்கினேன். முதலில் வெண்டைக்காய் 150 குழி, பாகற்காய் 200 குழி, புடலங்காய் 200 குழி, பீர்க்கன்காய் 100 குழி, சுரைக்காய் 50 குழி, பயத்தம் பயறு 25 குழி, கத்தரி 50 குழி என பிரித்து சாகுபடி செய்தேன். மற்ற இடத்தில் கொய்யா, வாழை, தென்னை, மூங்கில், தீவனப்புல் ஒன்றரை ஏக்கர் என்று பயிரிட்டேன். காய்கறிகளில் நல்ல விளைச்சல். அவற்றை நானே நேரடியாக சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்தேன். நல்ல லாபம் கிடைத்தது. இதனால் தொடர்ந்து காய்கறி பயிரிட்டு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன்.
பாகற்காயைப் பொருத்தவரை வரிசைக்கு வரிசை 2 மீட்டர், குழிக்குக் குழி 1.5 மீட்டர் இடைவெளி விட்டு குழிக்கு 5 விதைகள் ஊன்றுவோம். நட்டவுடன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது. ஏக்கருக்கு 10 கிலோ தொழுவுரம் குழிக்கு அடியுரமாக இடவேண்டும். விதைத்த 30ம் நாள் குழிக்கு 20 கிராம் யூரியா மேலுரமாக இடவேண்டும். மண்ணின் தன்மையைப் பொறுத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. இதேபோல்தான் பீர்க்கங்காய்க்கும் செய்ய வேண்டும். நான் சாகுபடி செய்திருப்பது அனைத்தும் நாட்டு ரகங்கள். கத்தரியும் அப்படித்தான். வாரத்திற்கு இரண்டு முறை களைஎடுப்போம். காய்கறிகளைப் பொறுத்தவரை மூன்று மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். கத்தரிக்காய் நாட்டு ரகம் என்பதால் இன்னும் கூடுதல் நாட்கள் அறுவடை இருக்கும். நான் நீள பாகற்காய், ஜிமிக்கி பாகற்காய் சாகுபடி செய்திருக்கிறேன். எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் நேரடியாக நானே வாகனத்தில் எடுத்துச் சென்று தஞ்சை மாவட்டத்தில் நடக்கும் சந்தைகளில் வியாபாரம் செய்து விடுவேன். அதனால் நான் விளைவிக்கும் காய்கறிகளுக்கு நானே விலை நிர்ணயம்செய்கிறேன்.திங்கட்கிழமை தஞ்சாவூர், செவ்வாய்க்கிழமை ஈபி காலனி, புதன்கிழமை மாதா கோட்டை, வியாழக்கிழமை தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம், வெள்ளிக்கிழமை வல்லம், சனிக்கிழமை மருங்குளம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தையில் மக்களிடம் நேரடியாக விற்பனை செய்வேன்.
பாகற்காயை ரூ.80 க்கு ஆரம்பித்து பின்னர் கூட்டத்தைப் பொறுத்து விலை குறைத்து விற்பனை செய்வேன். இதனால் எனக்கு லாபம் கிடைக்குமே தவிர எப்பொழுதும் நஷ்டம் ஏற்படாது. பொதுமக்கள் வருகை குறைவாக இருந்தால் விலையைக் குறைத்துக் கொடுத்து விடுவேன். எங்களிடமிருந்து வியாபாரிகள் பெற்று மூன்று மடங்கு விற்பனை செய்வதற்கு பதில் நானே மக்களிடம் நேரடியாக குறைவான விலைக்கு விற்பனை செய்வதால் எனக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைத்துவிடுகிறது.மதிய நேரத்தில் என் மனைவி சூர்யா மற்றும் உறவினருடன் அறுவடை செய்ய ஆரம்பித்தால் மாலைக்குள் சந்தைக்கு எடுத்து சென்று 4 மணி நேரத்தில் விற்பனையை முடித்து விடுவேன். அன்றன்று என்ன விலை இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் காய்கறிகள் விற்பனை செய்து விடுவேன். வெண்டைக்காய் ஒரு நாள் விட்டு ஒருநாளும், கத்தரிக்காய், பீர்க்கங்காய்களை தினமும் பறிப்போம். இதுபோக கொய்யா, எலுமிச்சை என்றும் பறித்து விற்பனைக்கு எடுத்துச் செல்வேன். 2 மாதம் அறுவடையில் முழுமையாக நமக்கு லாபம்தான். களை பறிப்புக்கோ, காய்கறி அறுவடைக்கோ ஆட்கள் வைப்பதில்லை. நாங்களே செய்து விடுவோம். தண்ணீர் பாய்ச்சுவதும் நானே செய்து விடுவேன். அதனால் ஆட்கள் கூலி மிச்சம். எப்படி பார்த்தாலும் மாதத்திற்கு காய்கறி வியாபாரத்தில் குறைந்தது 60 ஆயிரம் வரை லாபம் எடுத்துவிடுவேன்.அதேபோல் கடந்த முறை சோளம் சாகுபடி செய்து இருந்தேன். அமோக லாபம் கிடைத்தது. இப்படி ஒவ்வொரு பயிரையும் மாற்றி மாற்றி சாகுபடி செய்வதால் கூடுதல் வருமானம் பார்த்துவிடுவேன். இப்போது எங்களிடம் 9 மாடுகள், 15 ஆடுகள், 10க்கும் அதிகமான கோழிகள் இருக்கின்றன. இவற்றின் மூலமும் வருமானம் வருகிறது’’ என மகிழ்ச்சி பொங்க கூறி முடித்தார்.
தொடர்புக்கு:
முருகேசன் : 93603 04030.