Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் நிறங்கள் மாறும் தில்லை மரம்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் பருவத்திற்கு ஏற்ப நிறம் மாறும் தில்லை மரத்தின் இலைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசுமை மாற காட்டில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட புள்ளிமான் வெளிமான் மற்றும் குதிரை, நரி, குரங்கு, முயல் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

இந்தகாட்டில் ராவணன் எதிர்த்து இலங்கைக்கு போருக்கு சென்றபோது ராமர் இந்த காட்டில் நின்று பார்த்ததாகவும், அது ராவணனின் பின்பக்கம் என தெரிந்ததால், வீரனுக்கு பின் பக்கத்தால் சென்று போரிடுவது அழகு அல்ல என்பதை கருத்தில் கொண்டு போராடாமல் திரும்பிச் சென்றதாகவும் வரலாறு ராமர் நின்று இலங்கையை பார்த்த இடத்தில் ராமர் பாதம் அமைந்துள்ளது. இதை சுற்றி 150க்கு மேற்பட்ட மூலிகை வனமும் உள்ளது.

மேலும் கோடியக்கரை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சன்யாசி முனீஸ்வரன் கோயில் அருகே சாலையின் இரு புறமும் காணப்படும் தில்லை மரத்து இலைகள் வெவ்வேறு வண்ணத்தில் காணப்படுகிறது. இந்த மரத்தின் இலைகள் மூன்று நிறங்களில் மாறுவது குறிப்பிட்ட சில பருவத்திலும் சில நாட்களில் மட்டுமே. பின்னர் மீண்டும் இந்த இலைகள் பசுமைக்கு மாறி விடுகிறது. சுற்றுலாப் பயணிகளும் இயற்கை ஆர்வலர்களும் இந்த இயற்கை அழகினை சாலை வழியே செல்லும் பொழுது நின்று பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த தில்லை மரம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தல விருட்சமாக உள்ளது. இந்த மரத்தின் இலைகள் ஒரே மாதத்தில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என மாறி மீண்டும் பச்சை நிறத்திற்கு மாறிவிடுகிறது.