வசவப்பபுரத்தில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி நெல்லை - தூத்துக்குடி சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
செய்துங்கநல்லூர் : வசவப்பபுரத்தில் சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிகுடங்களுடன் நெல்லை- தூத்துக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வசவப்பபுரம்.
இந்த கிராமத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தும் போது டிராக்டர், லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கி வந்துள்ளனர். சீரான குடிநீர் வராததால் கிராம மக்கள் நெல்லை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.
தேசிய சாலைகளை கடந்து சென்று தண்ணீர் எடுத்து வருவது மிகவும் ஆபத்தாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். முறப்பநாடு தாமிரபரணி ஆற்றின் அருகேயுள்ள இந்த கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்குவதில் அடிக்கடி பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சீரான குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நெல்லை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கருங்குளம் யூனியன் பிடிஓ மற்றும் தனி அலுவலருமான பழனிச்சாமி நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் காலை 7மணிக்குள் அனைவருக்கும் குடிநீர் வந்து சேரும் என்று உறுதியளித்ததால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
கருங்குளம் யூனியன் தனி அலுவலர், ஊராட்சி செயலரிடம் பொது மக்களுக்கு சரியான நேரத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை என்று பொதுமக்களிடமிருந்து புகார் வந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து மறுநாள் தனி அலுவலர் கூறியபடி நேற்று காலை 7 மணிக்கு குழாயில் குடிநீர் வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிரந்தர தீர்வு காண வேண்டும்
இதுகுறித்து வசவப்பபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் கூறுகையில், எங்களது கிராமத்திற்கு குடிநீர் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் எங்களுக்கு குடிநீர் பற்றாக்குறையாக வழங்குவதால் மனவேதனை அளிக்கிறது.
குடிநீரையே நாங்கள் போராடி வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


