சென்னை: மூத்த கல்வியாளர் வசந்தி தேவி மறைவையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மூத்த கல்வியாளரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மாநில மகளிர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளில் மிகச் சிறந்த பங்களிப்பினை ஆற்றியதோடு, சமூகத்தின் மீதும் பெரும் அக்கறை கொண்டவராக வசந்தி தேவி திகழ்ந்தார்.
கல்வியில் மதவாதம், வியாபாரம், ஒன்றிய அரசின் அதிகார குவிப்பு ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தார். கல்வித் தளத்தில் மட்டுமல்லாது பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் போராடிய செயற்பாட்டாளர் வசந்தி தேவி. அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், கல்விப்புலத்தைச் சேர்ந்த அறிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்களும் வசந்திதேவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.