Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கடினமான சூழலில் 5 விக்கெட் வீழ்த்தியது அற்புதமான விஷயம்: வருண்சக்ரவர்த்திக்கு கேப்டன் சூர்யகுமார் பாராட்டு

கெபெரா: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 4 போட்டி கொண்ட டி.20 தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டி நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 39, அக்சர் பட்டேல் 27, திலக்வரமா 20 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்க அணியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 24, மார்க்ரம் 3, மார்கோ ஜான்சன் 7, கிளாசென் 2, டேவிட் மில்லர் 0 என வருண் சக்ரவர்த்தி பந்தில் அவுட் ஆகினர். 86 ஓவருக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கடைசி 3 ஓவரில் இந்திய அணி பவுலிங்கில் சொதப்பினர். இதனால் தென்ஆப்ரிக்கா 19 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நாட் அவுட்டாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 47 ரன் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். ஜெரால்ட் கோட்ஸி 9 பந்தில் 19 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார். வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் எடுத்தும் பலனின்றி போனது. தோல்வி குறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் கூறுகையில், ``முதல் பேட்டிங் ஆடும் போது பேட்ஸ்மேன்களால் எந்த ரன்கள் சேர்க்க முடிகிறதோ அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். டி20ல் 125 ரன்களோ அல்லது 140 ரன்கள் எடுப்பதையோ விரும்ப மாட்டோம். ஆனால் இந்திய அணியின் பவுலர்கள் செயல்பட்ட விதம் பெருமையாக உள்ளது. இதுபோன்ற கடினமான சூழலில் ஒரு பவுலர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதமான விஷயம். டி20ல் ஆட வருண்சக்கரவர்த்தி கடினமாக உழைத்து வருகிறார். அதேபோல் இப்படியான தருணத்திற்காக நீண்ட காலமாக காத்திருந்தார் என்று சொல்லவேண்டும். மிகச்சிறந்த பவுலிங்கை வருண் வெளிப்படுத்தி இருக்கிறார். இன்னும் 2 போட்டிகளில் மீதமுள்ளது.

ஜோகன்ஸ்பர்க் செல்வதை நினைத்து உற்சாகமாக உள்ளது, என்றார். தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் கூறுகையில், ``நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எங்களின் திட்டத்தை பவுலர்கள் சிறப்பாக செயல்படுத்தி காட்டினர். பேட்டிங்கில் பல தவறுகளை செய்தோம். மிடில் ஆர்டரில் நாங்கள் கொத்தாக விக்கெட்டுகளை இழந்தோம். இது நல்ல விஷயம் கிடையாது. வெற்றியைப் பெற்றாலும் குறையை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இளம் வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது நல்ல விஷயம். பல இளம் வீரர்கள் அணியில் உள்ள சீனியர்களுக்கு ஊக்கம் அளிக்கின்றனர்’’ என்றார். 1-1 என தொடர் சமனில் உள்ள நிலையில் 3வது போட்டி வரும் 13ம் தேதி செஞ்சூரியனில் நடக்கிறது.