ஜோலார்பேட்டை: வாணியம்பாடி அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் சக்கரத்தில் திடீரென புகை வந்ததால் ரயில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. புதுடெல்லியில் இருந்து கேரளா செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி-விண்ணமங்கலம் இடையே வளையாம்பட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ் 5 பெட்டியின் சக்கரத்தில் இருந்து திடீரென புகை வந்தது. இதையறிந்த ரயில் இன்ஜின் டிரைவர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். அதன்பிறகு டிரைவர் ரயில்வே அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் ரயில் டிரைவர், ரயில் கார்டு ஆகியோர் சுமார் 20 நிமிடம் போராடி சரி செய்தனர். அதன்பிறகு ரயில் ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது. ரயில் 20 நிமிடம் நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதிப்பட்டனர். ஆனால் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தியதால் வேறு எந்த வித ரயிலுக்கும் பாதிப்பில்லை. அவை வழக்கம்போல் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. ரயிலில் புகை கிளம்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.