Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற பஸ்சை விரட்டிச்சென்று பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள்

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற பஸ்சை விரட்டிச்சென்று பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய மாணவி 437 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்(45). இவரது மகள் மாணவி சுஹாசினி(17). இவர் ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் அரசு டவுன் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடந்தது. எனவே, மாணவி சுஹாசினி தேர்வு எழுத செல்ல அன்று காலை கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது, வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் வரை செல்லும் அரசு டவுன் அங்கு வந்தது. ஆனால், அங்கு மாணவி நின்று கொண்டிருப்பதை கவனிக்காமல் பஸ் நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டபடி பஸ்சை பின்தொடர்ந்து ஓடிச்சென்றார். இதை பார்த்து அங்கிருந்த பொதுமக்களும் கூச்சலிடவே சிறிது தூரத்தில் பஸ் நின்றது. பின்னர், மாணவி சுஹாசினி அந்த பஸ்சில் ஏறி தேர்வு எழுத சென்றார்.

இதற்கிடையில், அந்த மாணவி பஸ்சை நிறுத்தும்படி கூறி பின்தொடர்ந்து ஓடியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஆம்பூர் பணிமனை கிளை மேலாளர் கணேசன், திருப்பத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் குமரன், வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராகவன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் முனிராஜை சஸ்பெண்ட் செய்தும், தற்காலிகமாக பணிபுரிந்து கண்டக்டர் அசோக்குமாரை பணிநீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. அதில், மாணவி சுஹாசினி 437 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மாணவிக்கு இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவி சுஹாசினி கூறுகையில், `எனது தாய் இறந்து 7 ஆண்டுகளான நிலையில், எனது தந்தை கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை கவனித்து வருகிறார். நான் மேற்கொண்டு மருத்துவ துறை சார்ந்த உயர்கல்வி படிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வியை படிக்க முடியுமா? என தெரியவில்லை. அரசு எனது மேல்படிப்பிற்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.