புதுடெல்லி: வந்தே பாரத் ரயில்களில் இனி உள்ளூர் உணவு வகைககள் வழங்கப்படும் என்றும் எதிர்காலத்தில் படிப்படியாக இது அனைத்து ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லி ரயில் பவனில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, வந்தே பாரத் ரயில்களில் அந்தந்தப் பகுதியின் உள்ளூர் உணவு வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் வைஷ்ணவ் உத்தரவிட்டார். உள்ளூர் உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது, பயணிகளின் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தும் என்றும், இந்த வசதி எதிர்காலத்தில் படிப்படியாக அனைத்து ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
போலி அடையாள அட்டைகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதைத் தடுக்க ரயில்வே மேற்கொண்ட நடவடிக்கைகள் நேர்மறையான பலன்களைத் தந்துள்ளதாக கூறிய அமைச்சர் வைஷ்ணவ், அனைத்து பயணிகளும் உண்மையான பயனர் அடையாள கணக்குகள் மூலம் எளிதாக பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யும் அளவிற்கு முன்பதிவு நடைமுறை சீர்திருத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


