Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வண்டலூர் அருகே துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் திருட்டு: மோப்பநாய்க்கு பயந்து மிளகாய்ப்பொடி தூவிச் சென்றனர்

கூடுவாஞ்சேரி: வேங்கடமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில் மோப்பநாய் தங்களை கண்டுபிக்காமல் இருக்கும் வகையில் மர்மநபர்கள் வீட்டின் உள்ளே, வெளியே மிளகாய்ப்பொடி தூவிச் சென்றனர்.வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா (38), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தரைத்தளத்திலும், அவருடைய அம்மா பிரேமா முதல் தளத்திலும் வசிக்கின்றனர்.

கடந்த 15ம் தேதி பிரசன்னா தனது குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை, முதல் தளத்தில் வசிக்கும் பிரசன்னாவின் அம்மா பிரேமா மாடியிலிருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது, பிரசன்னாவின் வீட்டு முன்பக்க கேட் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 25 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதில் மர்ம நபர்கள், தங்களை மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருக்கும் வகையில் வீட்டில் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து வீட்டின் உள்பக்கம் மற்றும் வெளிப்புறத்தில் தூவிச் சென்றுள்ளனர். உடனே பிரேமா தன் மகனுக்கு தகவல் தெரிவித்தார். பிரசன்னா தாழம்பூர் போலீசுக்கு செல்போன் மூலம் புகார் தெரிவித்தார். போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் வேங்கடமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.