Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் பாடை காவடி திருவிழா பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

*ஆலோசனை கூட்டத்தில் முடிவு

வலங்கைமான் : வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் பாடை காவடி திருவிழா முன்னேற்பாடு குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் விதமாக கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

மேலும் பக்தர்கள் வசிதக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது.

இது சக்தி ஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில், மிகுந்த நோய் வாய்ப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்களை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வதைப் போன்று பாடை காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டி கொள்வர்.

இந்த ஆண்டுக்கான பாடை காவடி திருவிழா கடந்த 7ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது. அதனை அடுத்து 9ம்தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 16ம் தேதி இரண்டாவது காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான பாடை காவடி திருவிழா வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் 30ம்தேதி புஷ்ப பல்லாக்கு விழாவும் நடைபெற உள்ளது.இந்நிலையில் நேற்று தாலுகா அலுவலகத்தில் திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுக்கான கூட்டம் தாசில்தார் (பொறுப்பு) ஜெயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும். காவல்துறை சார்பில் கோயில் மற்றும் தற்காலிக பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் காவலர்களை நியமித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திடவும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி குற்ற நடவடிக்கைகளை கண்காணித்து விடவும் முடிவு செய்யப்பட்டது.

வர்த்தகர் சங்கத்தின் சார்பில் திருவிழா மற்றும் பல்லாக்கு காலங்களில் இரவு 12 மணி வரை கடைகளை திறந்து இருக்க அனுமதிக்க வேண்டும், திருவிழா மற்றும் பல்லக்கு காலங்களில் வலங்கைமான் மற்றும் தொழுவூர் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடையினை தற்காலிகமாக மூட வேண்டும் என கோரிக்கை விடப்படட்டது.

கூட்டத்தில் திமுக நகர செயலாளர் சிவனேசன், போக்குவரத்து துறை சார்பில் திருஞான சம்பந்தம், நெடுஞ்சாலை துறை சார்பில் செந்தில்குமார், தீயணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் பார்த்திபன், சுகாதார துறை சார்பில் சுகாதார ஆய்வாளர் நாடிமுத்து, மின்வாரியம் சார்பில் அகஸ்தியன், வருவாய் ஆய்வாளர் ஏஞ்சல்ஸ், மாரியம்மன் கோயில் நிர்வாகி சீனிவாசன், வர்த்தக சங்க தலைவர் குணா, செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.