மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே உள்ள தென் திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருமணம் செய்து கொள்ள உத்திரமேரூரைச் சேர்ந்த தமிழ்மணி-மோகனப்பிரியா, கருங்குழி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் கவிதா ஆகிய மணமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு குடும்ப சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து தகுதியான மணமக்கள் ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த இரண்டு ஜோடிகளின் திருமண நிகழ்ச்சி செயல் அலுவலர் மேகவண்ணன் தலைமையில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் நேற்று காலை நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலை துறையின் சார்பில் பட்டுச்சேலை, பட்டு வேட்டி, கைக்கடிகாரம், தங்கத் தாலி, ஆகியவற்றை ஒன்றிய செயலாளர் படாளம் சத்தியசாய், அறங்காவலர் குழு தலைவர் தினேஷ் ஏழுமலை, அவைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர்.
இதில், தலைமை அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியார் மந்திரங்கள் முழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து, திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கும் ரூ.75ஆயிரம் மதிப்பிலான கட்டில்,பீரோ, மெத்தை உள்ளிட்ட 29 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.


