Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லாத பயணம்: இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு

நெல்லை: புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு மூத்த குடிமக்கள் கட்டணமில்லாத ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள இந்துசமய அறநிலையத்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவ திருக்கோயில்களுக்கு மூத்த குடிமக்கள் புரட்டாசி மாதத்தில் கட்டணமில்லாத ஆன்மீக பயணம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வைணவ திருக்கோயில்களுக்கான இந்த ஆன்மீக பயணமானது ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும், அதாவது வரும் செப்21, 28ம் தேதிகள் மற்றும் அக்டோபர் 5 மற்றும் 12ம் தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மண்டலங்களில் பெருங்குளம் மாயக்கூத்தர் திருக்கோயில், இரட்டை திருப்பதி, அரவிந்தலோசனர் திருக்கோயில், கள்ளபிரான், தேவர்பிரான் திருக்கோயில்கள், நத்தம் விஜயாச பெருமாள் திருக்கோயில், திருப்புளியங்குடி காய்சினி வேய்ந்த பெருமாள் திருக்கோயில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி ஆதிநாத ஆழ்வார் திருக்கோயில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில், கள்ளபிரான் வைகுண்ட பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்தில் கள்ளழகர் கோயில் தொடங்கி, கூடலழகர் பெருமாள் ேகாயில் வரையும், திருச்சி மண்டலத்தில் ரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தொடங்கி பல பெருமாள் கோயில்களும், தஞ்சாவூர், மயிலாடுதுறை மண்டலங்களில் கும்பேகோணம் சக்கரபாணி பெருமாள் கோயில் தொடங்கி சில திருக்கோயில்களும் இடம் பெற்றுள்ளன. இந்த ஆன்மீக பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் அறநிலையத்தறையின் இணையத்தளத்தில் உள்ளது.

அவற்றை பதிவிறக்கம் செய்து நிரப்பியோ அல்லது அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளோடு வரும் 19ம் தேதிக்குள் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். புரட்டாசி மாதத்தில் வைணவ திருத்தலங்களுக்கு சென்று இறை வழிபாடு செய்ய விரும்பும் மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள அறநிலையத்துறை கேட்டு கொண்டுள்ளது.