Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வைகாசி விசாக திருவிழா: பழநி கோயிலில் இன்று தேரோட்டம்

பழநி: பழநி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாகம் குறிப்பிடத்தக்கது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா இந்த ஆண்டு கடந்த ஜூன் 3ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழா நாட்களில் வள்ளி - தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசுவாமி ரத வீதிகளில் தங்கமயில் வாகனம், தந்தப்பல்லக்கு, காமதேனு, ஆட்டுக்கிடா, சப்பரம், வெள்ளி யானை, வெள்ளி மயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. முன்னதாக வள்ளி - தெய்வானை சமேதரராக முத்துக்குமர சுவாமிக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.

இரவு 8 மணியளவில் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க கோயில் அர்ச்சக ஸ்தானீகர் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மங்கல நாண் அணிவிக்கும் நிகழ்வை நடத்தினர். தொடர்ந்து மாலை மாற்றுதல், அப்பளம் உடைத்தல் போன்ற திருமண சடங்கு நிகழ்வுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் ெசய்தனர்.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்ட விழாவையொட்டி பழநியில் அதிகளவில் பக்தர்கள் குவிவதால் நகரம் களைகட்டியுள்ளது.