திருவனந்தபுரம்: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 14ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (15ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமய பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
வரும் 19ம் தேதி சபரிமலை கோயில் பிரதிஷ்டை தினமாகும். இதை முன்னிட்டு அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். வைகாசி மாத பூஜைகளும், பிரதிஷ்டை தினமும் சேர்ந்து வருவதால் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.