அதிகரித்து வரும் வெறிநாய்க்கடி: ரேபிஸ்சை தடுக்க ஒரே வழி தடுப்பூசி; 4 முறை செலுத்த வேண்டும்; பூஸ்டர் தடுப்பூசி நல்லது; மருத்துவர்கள் அறிவுறுத்தல்
* சிறப்பு செய்தி
வெறிநாய்க்கடி மற்றும் அதன் விளைவாக ஏற்படும் ரேபிஸ் நோய் உலகளவில் பொது சுகாதாரத்துக்கு கடுமையான அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. ரேபிஸ், ஒரு கொடிய வைரஸ் நோயாகும். இது மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளின் மூளை, நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்படி, 99 சதவீத ரேபிஸ் பாதிப்பு நாய்க்கடி மூலமே மனிதர்களுக்கு பரவுகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதற்கு முறையான தடுப்பூசி திட்டங்களின் பற்றாக்குறை மற்றும் பொது விழிப்புணர்வு குறைவு ஆகியவை காரணமாக உள்ளது.
ரேபிஸ் அல்லது ரேப்டோ வைரஸ் (Rabdovirus) என்பது ஒரு கொடிய வைரஸ் நோய். இது மனிதர்களின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கி, மூளை அழற்சி (Encephalitis) ஏற்படுத்துகிறது. இந்த நோய் பெரும்பாலும் நாய்கள், பூனைகள், வவ்வால்கள், நரிகள், ஓநாய்கள் மற்றும் குரங்குகள் போன்ற விலங்குகளின் உமிழ்நீர் மூலம் பரவுகிறது. குறிப்பாக, ரேபிஸ் பரவுவதற்கு தெருநாய்கள் முக்கிய காரணமாக உள்ளன. ரேபிஸ் நோயின் ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, கடிபட்ட இடத்தில் வலி அல்லது எரிச்சல் ஆகியவை உள்ளன. நோய் முற்றிய பிறகு, குழப்பம், பிரம்மைகள், நீர் வெறுப்பு (Hydrophobia), அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, வலிப்பு மற்றும் மயக்கம் போன்றவை ஏற்படுகின்றன. ரேபிஸ் நோய் கிட்டத்தட்ட 100 சதவீதம் மரணத்தில் முடிவடைகிறது. உலகளவில் ஆண்டுக்கு 59,000 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழக்கின்றனர். இதில், இந்தியாவில் மட்டும் 15,000 பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வருடத்தில் நாய்க்கடி சம்பவங்கள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறையின் ஆய்வு தெரிவிக்கிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களிலும், கிராமப்புறங்களிலும் தெருநாய்கள் மக்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி உயர்ந்திருப்பது இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும், குப்பை முறையாக அகற்றப்படாதது, உணவு வளங்கள் எளிதில் கிடைப்பது மற்றும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படாதது ஆகியவை இந்த பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
இதுதொடர்பாக சிம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை ஆலோசகர் மருத்துவர் சையத் ஹாரிஸ் கூறியதாவது: நாய் கடிக்கும்போது அந்த நாயின் உமிழ்நீர் ரத்தத்தில் கலந்தால் அல்லது திறந்த வெளி புண் மீது பட்டால் பாதிப்பு ஏற்படும். வீட்டில் வளர்க்கும் அல்லது ஆரோக்கியமான நாய் கடித்தால் ரேபிஸ் நோய் வராது என சொல்ல முடியாது. ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டால் அது முழுமையாக குணப்படுத்துவது வாய்ப்பு இல்லை. ஆனால், வருவதற்கு முன்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுவது நல்லது. நாய் கடித்த பிறகு ரேபிஸ் நோய் வருமா, இல்லையா என்ற கேள்வி இருக்க கூடாது.
உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும். தற்போது விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அதுமட்டுமின்றி நாய்கடித்தால் 16 ஊசி செலுத்த வேண்டும் என்ற தவறான தகவல் இருக்கிறது. இதற்கு பயந்து சிலர் மருத்துவமனைக்கு வருவதில்லை. இது எல்லாம் மக்கள் செய்ய கூடாது. நாய் கடித்த பின் ஊசி செலுத்திக்கொள்வது ஒரு பாதுகாப்பு என்றால், கடிக்கும் முன் செலுத்திக்கொள்வதும் ஒரு வகை பாதுகாப்பு தான். வீட்டில் நாய் வளர்பவர்கள், தெருவில் அதிக நாய் உள்ளவர்கள் உள்ளிட்டோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தற்போதைய காலகட்டத்தில் 4 ஊசி அடுத்தடுத்த நாட்களில் செலுத்தினால் போதும்.
குறிப்பாக, நாய் கடித்த முதல் நாள் ஒரு தடுப்பூசி, 3வது நாள், 7வது நாள், 28வது நாள் செலுத்திக் கொள்ள வேண்டும். சிலர் நாய் கடித்த பிறகு ரத்தம் வரவில்லை என்று தடுப்பூசி செலுத்தாமல் இருப்பார்கள். அப்படி இருக்க கூடாது. தெருநாய் கடித்தால் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய்க்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி வளர்ப்பவர்களை அந்த நாய் கடித்தாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். சிலர் நாய் கடித்து தடுப்பூசி செலுத்திய பிறகு அசைவம் சாப்பிட கூடாது என கூறுவார்கள், அதுவும் தவறு. நாய் கடித்தால் உடனடியாக தண்ணீரில் 15 முதல் 20 நிமிடங்கள் சோப்பு போட்டு கழுவ வேண்டும். அதற்கு பிறகு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* தெரு நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
காயத்தை சுத்தம் செய்ய வேண்டும். தொற்று நீக்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி அட்டவணையை முறையாக பின்பற்ற வேண்டும்.
கடிபட்ட இடத்தில் கட்டு போட்ட பிறகு சுண்ணாம்பு, பச்சிலை, சந்தனம் போன்றவற்றை தடவுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
* ரேபிஸ் அதிகரிக்க காரணம்
தெருநாய்களின் எண்ணிக்கை உயர்வு, விழிப்புணர்வு குறைவு, விலங்கு கட்டுப்பாட்டில் குறைபாடு, குப்பை மேலாண்மை பிரச்னை, மூட நம்பிக்கை.