Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 25 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 25 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, போக்குவரத்து துறை, சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கந்தர்வகோட்டை சின்னதுரை (இந்திய கம்யூ.) பேசியதாவது:

போக்குவரத்து துறையில் ஏற்படும் நிதி பற்றாக்குறையை தமிழக அரசு உடனுக்குடன் வழங்க வேண்டும். இதனால் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பணப்பலன் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். 18 மாதம் ஆகியும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணம் கிடைப்பதில்லை. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 25 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

புதிய தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்காமல் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். போக்குவரத்து துறை தொழிலாளர்களின் கோரிக்கையை பேச்சுவார்த்தை மூலம் அரசு சுமூகமாக தீர்க்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் மாணவ - மாணவிகளின் விடுதிகளை சீரமைக்க வேண்டும். சிறுபான்மையினர் நலப்பணிக்காக வழங்கப்படும் பணம் முழுமையாக செலவழிக்கப்படுகிறதா என்பதை குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை அடையாளம் காணப்பட வேண்டும். ஒரே ஊர், ஒரே சுடுகாடு முறையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* முதல்வருக்கு அதிமுக எம்எல்ஏ பாராட்டு

சட்டப்பேரவையில் நேற்று உசிலம்பட்டி அய்யப்பன் (அதிமுக, ஓபிஎஸ் அணி) பேசும்போது, ‘‘எம்ஜிஆருக்கு சத்துணவு திட்டம் நல்ல பெயரை பெற்று தந்தது போன்று, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காலை உணவு திட்டம் நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதை நாங்களும் பாராட்டுகிறோம். இந்த திட்டத்தை தொடக்கப்பள்ளியில் இருந்து நடுநிலைப்பள்ளி வரை நீட்டிக்க வேண்டும். அதேபோன்று கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் பெண்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாயை கூட்டுறவு வங்கி மூலம் வழங்க வேண்டும்” என்றார்.