Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் இன்று ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கையில் பழமையான, மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு பச்சை நிற மரகத நடராஜர் தனி சன்னதியில் வீற்றுள்ளார். 6 அடி உயரமுள்ள மரகத நடராஜருக்கு ஒளி, ஒலியால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சந்தனகாப்பு இட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மரகத நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று புகழ்பெற்ற ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அன்று ஒருநாள் மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு மரகத நடராஜருக்கு 38 வகை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். பின்னர், மீண்டும் தூய சந்தன காப்பிட்டு நடை சாற்றப்படும். இதனால் மற்ற நாட்களில் சிறிய அளவிலான மரகதலிங்கம், ஸ்படிக லிங்கத்திற்கு சந்தனம், அன்னம் அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று ஆனி திருமஞ்சன உத்திரத்தை முன்னிட்டு மரகத நடராஜர் சன்னதி முன்புறம் வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து சிவகாமி அம்பாள் உடனுறை உற்சவ நடராஜர் மூர்த்திக்கு மஞ்சள், திருமஞ்சனப்பொடி, விபூதி, சந்தனம், பால், பன்னீர், இளநீர், வேள்வி புனிதநீர் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உள்பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா வந்தனர். பிறகு மங்களேஸ்வரி அம்மன் சன்னதியில் உற்சவ மூர்த்தி எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் சார்பில் திவான் பழனிவேல்பாண்டியன் செய்திருந்தார்.