Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உத்தரபிரதேசத்தில் இருந்து வந்தன; வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மர ஆந்தைகள், ஒரு ஜோடி கழுகு

சென்னை: விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் உத்தரபிரதேசத்தில் இருந்து மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிஃபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் இங்கிருந்து சருகு மான், நெருப்பு கோழிகள் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுக்களித்து விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் உத்தரபிரதேசத்தில் இருந்து மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிஃபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் இங்கிருந்து சருகுமான், நெருப்பு கோழிகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில், இது வன விலங்குகளுக்கான வெற்றிகரமான இனப்பெருக்க திட்டத்தை கொண்டுள்ளது மற்றும் குறிப்பாக கட்ட உடல் மலைப்பாம்பு, சருகு மான் மற்றும் நெருப்புக்கோழிகளை இனப்பெருக்கம் செய்வதில் வெற்றிகரமாக செயல்படுகிறது. மேற்கூறிய விலங்குகள் பெரும்பாலும் ஏனைய இந்திய உயிரியல் பூங்காக்களுடன் விலங்கு பரிமாற்ற திட்டத்தின் மூலம் பரிமாற்றம் செய்கின்றது.

இந்திய ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஆகஸ்ட் 2023ல் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கும், கான்பூர் உயிரியல் பூங்காவிற்கும் இடையே பூங்கா விலங்குகளை பரிமாறிக்கொள்ள முன்மொழியப்பட்டது. முன்மொழிவின்படி, 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள். ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிஃபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் என மொத்தம் நான்கு இனங்கள் கான்பூர் விலங்கியல் பூங்காவில் இருந்து நேற்று முன்தினம் 28ம் தேதி அன்று கொண்டு வரப்பட்டது.

இவை கான்பூரிலிருந்து சென்னைக்கு விலங்குகள் பரிமாற்றம் பயணத்தில் கான்பூர் உயிரியல் பூங்கா பணியாளர்கள், வனச்சரக அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர் மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால்நடை உதவி மருத்துவர் ஆகியோர் உடன் வந்தனர். பிறகு விலங்குகளின் உடல்நிலையை உயிரியல் பூங்கா கால்நடை டாக்டர்கள் பரிசோதித்து, விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்ட தற்காலிக அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட தனிமைப்படுத்தும் கால அவகாசம் முடிந்ததும், உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பார்க்கும் காட்சி பகுதிக்கு மாற்றப்படும்.

இதற்காக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்புகள், இரண்டு ஜோடி சருகு மான்கள், 3 நெருப்புக்கோழிகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள் மற்றும் ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகிய விலங்குகள் நேற்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.