Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உத்தரப் பிரதேச பாஜக-வில் பெரும் சலசலப்பு: முதலமைச்சர் ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி!!

லக்னோ: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனான கருத்து வேறுபாடுகளுக்கு பிறகு துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மெளரியா டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து இருப்பது புதிய யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்த பாரதிய ஜனதா கட்சி மக்களவையில் பெரும்பான்மை பெற தவறியது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்த்திருந்த உத்தரப் பிரதேச மாநில மக்கள் பாஜக-வுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்தனர். மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜக-வுக்கு 33 தொகுதிகளே கிடைத்தன.

இதையடுத்து தோல்விக்கான காரணம் குறித்து லக்னோவில் சந்தித்து விவாதித்தனர். அப்போது முதலமைச்சர் ஆதித்யநாதின் செயல்பாடுகளே தோல்விக்கு காரணம் என செயற்குழு நிர்வாகிகள் குற்றச்சாட்டினர். குறிப்பாக துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மெளரியா வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்தார். அரசாங்கத்தை விட கட்சியே பெரியது என்றும், கட்சியை விட யாரும் பெரியவர்கள் இல்லை என்றும் விமர்சித்த அவர், கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்காமல் உயர்பதவியில் உள்ளவர்கள் தனித்து செயலாற்றியதே தோல்விக்கு காரணம் என ஆதித்யநாத் மீது குற்றச்சாட்டி இருந்தார். முதலில் நான் ஒரு பாஜக தொண்டன். பின்னர்தான் துணை முதல்வர் என்ற கேசவ் பிரசாத் மெளரியாவின் பேச்சு முதல்வர் ஆதித்யநாத் உடனான விரிசல்களை விவரிக்கும் விதமாக இருந்தது.

முன்னதாக உத்தரப் பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷத்தும் தேர்தல் பின்னடைவுக்கு ஏழைகளின் வீடுகளை இடிக்கும் முதலமைச்சர் ஆதித்யநாத்தின் புல்டோசர் கலாசாரமே காரணம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், மாநில பாஜக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு டெல்லி சென்ற உத்திரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் மெளரியா, ஒன்றிய அமைச்சர் நட்டாவை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பு பற்றி விவரங்கள் ஏதும் வெளியிடப்படாத நிலையில் உத்திரப் பிரதேச முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற வியூகங்களுக்கு வித்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.