Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உத்தமபாளையம் தாலுகாவில் தோட்டக்கலை பண்ணை கிளை அமையுமா?

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேவாரம் : உத்தமபாளையம் தாலுகாவில் தோட்டக்கலைப் பண்ணை கிளை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் விவசாயம் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் ஒன்று. இங்கு முல்லை பெரியாறு, வைகை அணை, சோத்துப்பாறை, மஞ்சளாறு, சண்முகாநதி, உள்ளிட்ட அணைகளில் இருந்து ஒவ்வொரு வருடமும் திறக்கப்படும் தண்ணீரின் மூலமாக அதிகளவில் நெல் விவசாயம் நடைபெறுகிறது.

இங்கு நெல் விவசாயம் தவிர பணப்பயிர்கள் எனப்படும் திராட்சை, வாழை, முருங்கை, தக்காளி, பட்டர் பீன்ஸ், முட்டைக்கோஸ், பூசணிக்காய், கத்தரிக்காய், பீட்ரூட், மல்லி என காய்கறி விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, தேனி, உள்ளிட்ட ஐந்து தாலுகாவிலும் விவசாயம் நடைபெறுகிறது.

இதில் நெல் விவசாயம் அதிகளவில் கம்பம் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர், கோட்டுர், பி.சி.பட்டி வரை நடைபெற்று வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் தரிசாக கிடந்த நிலங்கள் கூட விளைநிலங்களாக மாறி வருகின்றன. இதனிடையே விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசும் வழங்கி வருகிறது.

அரசின் இலவச நாற்றுக்களை பெறுவதற்கு, தோட்டக்கலைப் பண்ணை மூலம் விவசாயிகளுக்கு தென்னை, வாழை, தக்காளி, மிளகாய், கத்தரிக்காய், முருங்கை, உள்ளிட்ட எண்ணற்ற பயிர்களை மானியமாக இலவசமாக தந்து விவசாய பரப்பினை அதிகரிக்க பெரும் ஊக்குவிப்பை அரசு அளித்து வருகிறது.பயன் தரக்கூடிய மரங்களான கொய்யா, சப்போட்டா, மாதுளை, உள்ளிட்ட மர வகைகளையும் அதிக அளவில் விவசாயிகளுக்கு தருவது மட்டுமல்லாமல் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு என்றே, மாவட்ட அளவில் ஒரே இடத்தில், பெரியகுளம் அருகே அரசின் தோட்டக்கலை பண்ணை செயல்படுகிறது.

இதன் மூலமாக அரசு தரக்கூடிய இலவச பயிர்கள், மரக்கன்றுகள், போன்றவை இங்கு விவசாயிகள் உரிய ஆவணம் கொண்டு வந்தால் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குகிறது.

தோட்டக்கலை பண்ணை மூலம் பயன்பெறக்கூடிய விவசாயிகள், ஒவ்வொரு ஊரிலும் இருக்கக்கூடிய வேளாண்மை துறை, மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களை, தொடர்பு கொண்டு இவர்கள் மூலமாக பெரியகுளம் சென்று மானியமாக வழங்கக்கூடிய பயிர் வகைகள் எடுத்து வரலாம். குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம், பகுதிகளில் இருந்தும் அதிக அளவில், பெரியகுளத்திற்கு சென்று அங்குள்ள தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ள இடத்திற்கு சென்று விதைப் பயிர்களை எடுத்து வருவது என்பது பெரும் சிரமமாக உள்ளது.

குறிப்பாக நலிவடைந்த விவசாயிகள், சிறுகுறு விவசாயிகள், பெரியகுளத்திற்கு சென்று நாற்றுகளை எடுத்து வருவதற்குள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டி உள்ளது. குறிப்பாக பயண நேரம், போக்குவரத்து செலவு போன்றவற்றால் விவசாயிகள் தோட்டக்கலை பண்ணைக்கு செல்வதற்குள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கம்பம் பள்ளத்தாக்கு விவசாய ஊர்களை அடிப்படையாகக் கொண்டு, பெரியகுளம் அரசு தோட்டக்கலைப் பண்ணை போன்று இதன் கிளை பண்ணை ஒன்றை நிறுவ வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக உத்தமபாளையம் தாலுகாவில் ஏதாவது ஒரு இடத்தில் தோட்டக்கலை பண்ணையின் கிளை அமைக்கப்பட்டால், கம்பம் பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவர். இதற்கு தோட்டக்கலை துறை, மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், பரிந்துரை செய்ய வேண்டும் என்றும், இதன் கிளையை அமைப்பதன் மூலமாக விவசாயிகள் பெரிதும் பயன் பெறுவது மட்டுமல்லாமல், விவசாயப் பரப்பு மென்மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயத்திற்கு ஊக்குவிப்பாக அமையும்தேனி மாவட்ட அளவில் பெரியகுளத்தில் மட்டுமே தோட்டக்கலை பண்ணை செயல்படுகிறது. மானிய விலையில், வழங்கப்படும் காய்கறிகள், பழமரங்கள், தென்னை உள்ளிட்டவை வேளான் விவசாயத்தை அதிகரிக்கவும், விவசாயத்தை பாதுகாத்திடவும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வழங்கப்படுகிறது. ஆனால் இது பெரியகுளத்தில் செயல்படுவதால், தூரங்களை கணக்கிட்டும், இதுகுறித்த விழிப்புணர்வும் இல்லாததால், விவசாயிகள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. குறிப்பாக கூடலூரில் இருந்து பெரியகுளம் செல்வதற்கு சுமார் 60 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது.

அதில் நாற்றுக்கள் எடுப்பதற்கும், அல்லது மானிய விலையில் பயிர்களை வாங்குவதற்கும், அதனை எடுத்து செல்வதற்கும் ஒரு வாகனத்தை வாடகைக்கு அனுப்பி அதற்கும் பெரும் செலவு செய்து தங்கள் விவசாய நிலங்களுக்கு கொண்டு வர வேண்டி உள்ளது. இதனால் தோட்டக்கலை விவசாயிகளை பொறுத்த வரை தனியார்களிடம் நாற்றுகள், மற்றும் பயிர்கள் வாங்கும் நிலை உள்ளது. எனவே இந்த நிலையை மாற்றிட தோட்டக்கலை பண்ணையின் கிளையை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

அரசின் மானியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

விவசாயிகளை பொறுத்த வரை தமிழக அரசின் மானியங்கள் குறித்து உள்ளூர் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தாமல் உள்ளதால், தமிழக அரசின் விவசாயிகளுக்கான மானிய உதவிகள் உரிய முறையில் சென்றடையாமல் உள்ளது.

எனவே இதனை மாற்றிட விவசாயிகளுக்கு தேவையான மானியங்களை 100% கொண்டு சேர்த்திடவும், இதேபோல் மாவட்ட அளவில் அனைத்து ஊர்களுக்கும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெரியகுளம் தோட்டக்கலைப் பண்ணையின் கிளைகளை விரிவாக்கம் செய்வது அவசியம் ஆகிறது.கம்பம் பள்ளத்தாக்கில் ஒரு கிளையும், அதேபோல் மற்ற பகுதிகளுக்கு ஒரு கிளையும், அமைக்கப்பட்டு, நாற்றுகள், மரங்கள், தரப்பட்டால் விவசாய பரப்பு அதிகரிப்பதுடன், விவசாயிகளுக்கும் பெரும் ஊக்குவிப்பாக அமையும்.