ஊத்துக்கோட்டை அருகே பயங்கரம்: மாயமான மாணவன் கத்தியால் வெட்டி கொலை செய்து புதைப்பு; உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
* சிறுவன் உள்பட 3 பேர் கைது; முக்கிய குற்றவாளியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன் மாயமான கல்லூரி மாணவன் கொலை செய்து புதைக்கப்பட்டார். நேற்று தாசில்தார் முன்னிலையில் உடலை தோண்டு எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஊத்துக்கோட்டை ரெட்டி தெருவில் வசித்து வருபவர் தனசேகர். கொத்தனார் இவரது மகன் தினேஷ் (19).
சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோரிடம் செல்போன் வாங்கி தரும்படி தினேஷ் கேட்டுள்ளார். அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் கோபத்தில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி வீட்டை விட்டு சென்று விட்டார் தினேஷ். அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் விசாரித்தனர். தினேஷ் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
அதனால் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தினேசை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் தினேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி தலைமையில் இன்ஸ்பெக்டர் தேவராஜ், எஸ்ஐ பிரசன்னவரதன், தனிப்படை எஸ்ஐக்கள் ராவ்பகதூர், செல்வராஜ் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையை சேர்ந்த நாகா (எ) நாகேஷ் (22), ஊத்துக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் நேற்று சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள், தினேசை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். அவர்கள் போலீசில் கூறியதாவது: ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் சென்னேரி கால்வாய் கரை முட்புதரில் நாங்கள் மது அருந்தி கொண்டிருந்தோம்.
எங்களுடன் தினேஷ் மற்றும் ஊத்துக்கோட்டையை சேர்ந்த காமேஷ் ஆகியோரும் மது அருந்தினர். காமேஷ், அடிதடி வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். நாங்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்தியபோது போதை தலைக்கேறியதும் காமேஷுக்கும் தினேஷுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியது. நாங்கள் சமாதானப்படுத்த முயன்றோம். அந்த நேரத்தில், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தினேஷின் கழுத்தில் காமேஷ் வெட்டினான்.
இதில் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தபடி கீழே விழுந்து இறந்தான் தினேஷ். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தோம். வேறு வழி இல்லாமல் ஒரு அடி ஆழத்திற்கு குழி தோண்டி தினேஷ் உடலை புதைத்து விட்டோம். பின்னர் எதுவும் தெரியாதது போன்று நைசாக அங்கிருந்து சென்று விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து தினேஷ் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக கைதான 3 பேரையும் அழைத்து கொண்டு போலீசார் மற்றும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு தாசில்தார் சுப்பிரமணி தலைமையிலான குழுவினர் விரைந்தனர்.
உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். காலை 11 மணியளவில், அழுகிய நிலையில் இருந்த தினேஷின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். முக்கிய உடல் பாகங்களை சேகரித்து சென்றனர். பின்னர் தினேஷின் உடலை அவர்களது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்ட நாகா (எ) நாகேஷ், கார்த்திக் ஆகியோரை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இருவரையும் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 17 வயது சிறுவனை திருவள்ளூர் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் இல்லத்தில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான காமேஷ், சிறையில் இருப்பதால் அவனை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் மட்டுமே தினேஷ் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என தெரிகிறது. நண்பனை அழைத்து சென்று மதுபோதையில் வெட்டி கொலை செய்த சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.