Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கிய பாலமாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் செயல்படுகிறது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 248வது அமெரிக்க தேசிய நாள் (சுதந்திர தினம்) விழாவிற்கு இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி, தலைமை வகித்தார். சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த‌ இந் நிகழ்ச்சியில் கார்செட்டி பேசுகையில், விண்வெளி ஆய்வு மற்றும் ஸ்டெம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் தொடர்ந்து வலுவடைந்து வரும் அமெரிக்க-இந்திய கூட்டுறவை பாராட்டினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கிய பாலமாக சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுகிறது. அமெரிக்க வரலாற்றின் மைல்கல்லை நினைவு கூரும் வேளையில், தமிழ்நாடு மற்றும் அமெரிக்கா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவோம். நமது இளைஞர்கள் மற்றும் சமுதாயங்களின் வளமான எதிர் காலத்திற்காக அமெரிக்க துணைத் தூதரகத்தின் சேவைகள் மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்தி கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பின் உணர்வைத் தொடர்ந்து தழைக்க செய்வோம் என்றார்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ், கௌரவ விருந்தினரான நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொண்டு விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஸ்டெம் கல்வியை மேம்படுத்துவதில் அமெரிக்க-இந்திய உறவுகளின் பன்முகத்தன்மையை பாராட்டி பேசினர். அப்போது நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்: விண்வெளியை கருப்பொருளாக கொண்டு தேசிய தின நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்கு வாழ்த்துகள், சமீபத்திய விண்வெளி பயணங்களில் பெண்களின் பங்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.