Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெற்றிகரமாக அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை வருகிறார்: 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீடு

சென்னை: அரசுமுறை பயணமாக கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்துக் கொண்டு, சிகாகோவில் இருந்து நேற்று காலை தமிழ்நாடு புறப்பட்டார். அவர் இன்று காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார். இந்த பயணத்தின்போது 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த மாதம் 27ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். அவருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில் துறை செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குனர் விஷ்ணு ஆகியோரும் சென்றனர்.

17 நாட்கள் பயணத்தின்போது, முதல்வர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். முக்கியமாக கடந்த 10ம் தேதி சிகாகோவில், போர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தொடர்ந்து கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டில் திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அமெரிக்க நாட்டின் சிகாகோவில் RGBSI நிறுவனத்துடன் ரூ.100 கோடி முதலீட்டில் ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்க முதலீட்டாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசும்போது, தமிழ்நாட்டில் திறன்மிகுந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திட தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக கடந்த மாதம் 27ம் தேதி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அங்கு தங்கி இருந்துபோது, அவர் முன்னிலையில் உலகளவில் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். வெற்றிகரமாக தனது அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சிகாகோவில் இருந்து விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்.

அவரை அமெரிக்க வாழ் தமிழர்கள் விமானம் நிலையம் வந்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். அனைவரும் முதல்வரிடம் ஆட்டோகிராப் வாங்கினர். வழியனுப்ப வந்த அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து சிகாகோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். நேற்று இரவு துபாய் வந்தடைந்த முதல்வர் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர் அதிகாலையில் விமானம் மூலம் பயணம் செய்து இன்று (சனி) காலை 8 மணிக்கு சென்னை, விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள், திமுக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக கூடி மேள தாளம் முழங்க முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.