அமெரிக்கா விதித்துள்ள 25% வரி விதிப்பால் தமிழகத்தில் ஜவுளி ஏற்றுமதி 5% சரியும்: உற்பத்தியாளர்கள் குமுறல்
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி உற்பத்தியில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், கோவை, திருப்பூர், விருதுநகர் உள்பட பல இடங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இப்பகுதிகளில் விசைத்தறியில் டவல், கேரளா வேஷ்டி, சேலை, அபூர்வா சேலை, காட்டன் சேலை, வேஷ்டி, டிசர்ட், பெட்ஷீட் உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பில் ஜவுளி உற்பத்தி நடக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், இதைதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கும், அமெரிக்கா, லண்டன், ரஷ்யா, துபாய், ஆஸ்திரேலியா உள்பட பல வெளிநாடுகளுக்கும் செல்கிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வரிவிதிப்பில் அடாவடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதாவது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் கூடுதல் வரி விதித்தார். அப்போது இந்தியாவுக்கு 26 சதவீதம் வரியை டிரம்ப் விதித்தார். இதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்தார். இந்த வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் காட்டன் ஜவுளிகள், ஆண்கள், பெண்கள் அணியும் உள்ளாடைகள், டிசர்ட், ஸ்கிரீன் துணிகள், கால்மிதி, கைக்குட்டை, பெட்ஷீட், போர்வை உள்பட பல ஜவுளிகளின் ஏற்றுமதி குறையும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சேலத்தை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் ஜவுளி உற்பத்தி என்பது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகும். பருத்தியில் தொடங்கி ஜவுளியாக உற்பத்தியாகி அணியும் வரை பல்லாயிரம் தொழிலாளர்களின் உழைப்பு உள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 28 சதவீதம் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சேலம், நாமக்கல் உள்பட பத்து மாவட்டங்களில் இருந்து காட்டன் சர்ட், ஜீன்ஸ் பேண்ட், உள்ளாடைகள், டிசர்ட் உள்பட பல ஜவுளிகள் அமெரிக்காவுக்கு செல்கிறது.
அமெரிக்காவை பொறுத்தமட்டில் மிகப்பெரிய உலக பொருளாதார சந்தையாகும். இந்த நிலையில் அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின்பு பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். இந்தியாவில் இருந்து அங்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்துள்ளார். இது இன்று முதல் (1ம் தேதி) அமலுக்கு வருகிறது. இந்த வரி விதிப்பானது, தமிழக ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதாரணமாக ரூ.500 கொண்ட ஒரு ஜவுளியை அமெரிக்காவில் இறக்குமதி செய்யும்போது 25 சதவீதம் வரியோடு ரூ.625 செலுத்த வேண்டி இருக்கும்.
நமக்கு போட்டியாக சீனா, இந்தோனேஷியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த 25 சதவீதம் வரிவிதிப்பால் அமெரிக்காவில் இந்தியா பொருட்களின் விற்பனை குறையும். இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளிகள் 4 முதல் 5 சதவீதம் குறையும். இவ்வாறு ஏற்றுமதி குறையும்போது இங்குள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக ஜவுளிகள் விற்பனை மந்தமாக தான் உள்ளது. அமெரிக்கா வரிவிதிப்பால் மேலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்திய ஜவுளிகளுக்கு அமெரிக்கா 10 முதல் 15 வரியை விதிக்க ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.