நகர்ப்புறங்களில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
* குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்தினார்
* கூடுதலாக 3 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்
சென்னை: நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, குழந்தைகளுடன் உணவு அருந்தினார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இனி, தமிழகம் முழுவதும் 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினந்தோறும் காலை உணவு சாப்பிடுவார்கள். தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். காலை உணவு விரிவாக்க திட்டத்தின் மூலம் நகர்ப்புறத்தில் உள்ள 2,429 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 3.06 லட்சம் மாணவ-மாணவிகள் தினமும் பயன்பெறுவார்கள். முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காலையில் இங்கே வந்து குழந்தைகள் கூட உணவு சாப்பிட்டவுடனே, இந்த குழந்தைகளை போலவே, எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது. எப்படி இன்றைக்கு முழுவதும் நீங்கள் ஆக்டிவாக இருப்பீர்களோ, அப்படி எனக்கும் இது ஆக்டிவான டே தான். ஆக்டிவான டே மட்டுமல்ல, மனதுக்கு மிகவும் நிறைவான நாள். இந்தத் திட்டத்தால் 20 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்றால், இதைவிட மனநிறைவு என்ன இருக்க முடியம்? அடுத்து, இது மகிழ்ச்சிக்குரிய நாளும்கூட. ஏனென்றால், பஞ்சாப் முதல்வர் - எனது நண்பர் பகவந்த் மான் இங்கே வந்திருக்கிறார். தமிழ்நாடு மக்கள் சார்பில் நான் அவரை வரவேற்கிறேன்.
இதற்கு முன்பு, இப்போது நாடே திரும்பி பார்க்கின்ற புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு, டெல்லியின் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார். இப்போது இந்த திட்டத்திற்கு பகவந்த் மான் வந்திருக்கிறார். தன்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி வருகை தந்திருக்கக்கூடிய பஞ்சாப் முதலமைச்சருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் - சேராது இயல்வது நாடு” என்று சொன்னார் வான்புகழ் வள்ளுவர். அதாவது பசியும், பிணியும், பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடாக பாராட்டப்படும் என்று சொல்லியிருக்கிறார்.
வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாக இன்றைய நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. கல்வி அறிவை வழங்குவதால் மட்டும் பள்ளிகள் இருக்கக் கூடாது, அவர்கள் வயிற்றுப் பசியையும் போக்கவேண்டும் என்று நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றபோது, சென்னை மாநகராட்சியில் படிக்கக்கூடிய, பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக காலை உணவுத் திட்டத்தை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடங்கினோம்.
இந்த திட்டத்தை துவங்குவதற்கு காரணம் என்னவென்றால், ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களில், சென்னை, அசோக்நகர் மகளிர் பள்ளிக்கு சென்றபோது, அங்கிருந்த மாணவிகளிடம், ‘காலையில் என்ன சாப்பிட்டீர்கள்?’ என்று சாதாரணமாக கேட்டேன். ஆனால், நிறைய குழந்தைகள் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள். சில மாணவிகள், ‘டீ மட்டும் குடித்துவிட்டு வந்துவிட்டேன், பன் சாப்பிட்டேன்’ என்று சொன்னார்கள். இதை மனதில் வைத்துத்தான் காலை உணவுத் திட்டம் தேவை என்பதை அரசின் கொள்கையாகவே அறிவித்தேன்.
2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள், அண்ணாவின் பிறந்தநாளில், மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்தேன். பிறகு 25.08.2023 அன்று, கலைஞர் பிறந்த திருக்குவளையில், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்தோம். 2024ம் ஆண்டு காமராஜர் பிறந்தநாளில், ஊரக பகுதிகளில் இருக்கக்கூடிய அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதுவரை, 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வந்தார்கள்.
இந்த திட்டத்தின் அட்டகாசமான சக்சஸ் மற்றும் இது கொடுக்கக்கூடிய அபாரமான ரிசல்ட்டை பார்த்து இன்று, நகர்ப்புற பகுதிகளில் செயல்படுகின்ற 2,429 அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்கிறோம். இதனால், கூடுதலாக 3 லட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற இருக்கிறார்கள். மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், இனி தமிழ்நாட்டில் செயல்படுகின்ற 37,416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கின்ற 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினந்தோறும் காலையில் சூடாக, சுவையாக, சத்தாக சாப்பிட்டு, கிளாஸ் ரூமுக்குள்ளே தெம்பாக நுழைய இருக்கிறார்கள்.
ஆண்டொன்றுக்கு ரூ.600 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இதை செலவு என்று நான் சொல்ல மாட்டேன். இது ஒரு சூப்பரான சோஷியல் இன்வெஸ்ட்மென்ட். எதிர்காலத்தில், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமூகத்துக்கு தரப் போகின்ற முதலீடு இது. என்னரும் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களை நம்பி, அவர்களின் திறமை மேல், அறிவு மேல், ஆற்றல் மேல் நம்பிக்கை வைத்து, தமிழ்நாடு அரசு இந்த முதலீட்டை செய்கிறோம். நீங்கள் எல்லோரும் நன்றாக படித்து, முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் பணியாற்றினால், அதுதான் இந்தத் திட்டத்தின் உண்மையான வெற்றி.
இன்னும் கொஞ்சம் இறுமாப்போடு சொல்ல வேண்டும் என்றால், இனிமேல் பள்ளிக்கு வருகின்ற குழந்தைகள் பசி காரணமாக வாடிய முகத்துடனும், சோர்வுடனும் இருக்க மாட்டார்கள். புன்னகையும், நம்பிக்கையும், ஆர்வமும், சுறுசுறுப்பும் நிரம்பிய முகங்களைத்தான் இனி பார்க்கப் போகிறோம். காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, நான் இதை க்ளோசாக மானிட்டர் செய்து கொண்டு வருகிறேன். மாநில திட்டக்குழு மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பசி இல்லாத நிலை, பிள்ளைகள் வயிறு நிறைகிறது என்று மட்டும் இந்த திட்டத்தை சிம்ப்பிளாக பார்க்க முடியாது.
எதிர்பாராத பல நன்மைகளையும் இந்த திட்டம் ஏற்படுத்தி இருக்கிறது. காலை உணவை பள்ளிகளே வழங்குவதால், ஒரு குடும்பத்தில் அம்மா - அப்பா இரண்டு பேருமே வேலைக்கு செல்கிறார்கள் என்றால், அவர்களுடைய பணிச்சுமை குறைந்திருப்பதுடன், குழந்தைகள் ஸ்கூலில் வயிறார சாப்பிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையையும், நிம்மதியையும் தருகிறது. இந்த நேரத்தில் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கின்ற மற்றொரு முக்கியமான திட்டத்தையும் சொல்ல விரும்புகிறேன். அது, ‘ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்’.
இந்த திட்டத்தால் என்ன பயன் என்றால், இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் முதல் பகுதியில், 6 மாதம் வரையிலான 14,901 குழந்தைகளில், 13,262 குழந்தைகளையும், இரண்டாம் பகுதியில், 6 மாதத்தில் இருந்து 6 வயது வரையிலான 92,015 குழந்தைகளில், 61,651 குழந்தைகளையும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம். அதேபோல, இரண்டாம் கட்டத்தில், 6 மாதம் வரையிலான 76,705 குழந்தைகளில் 67,913 குழந்தைகளை சத்துள்ள குழந்தைகளாக வளர்த்தெடுத்திருக்கிறோம்.
மாணவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், நன்றாக சாப்பிடுங்கள், நன்றாக படியுங்கள், நன்றாக விளையாடுங்கள், உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். முதலமைச்சரான உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், நம்முடைய திராவிட மாடல் அரசும், எங்களால் முடிந்த எல்லாவற்றையும் உங்களுக்காக செய்து தருவோம். எங்களுக்கு நீங்கள்தான் எல்லாமே. எப்போதும் உங்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்! இருப்போம்! இருப்போம்! குழந்தைகளுக்கு ஆல் த பெஸ்ட்! இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், துணைவியார் குர்பித்கவுர் மான், அமைச்சர்கள் கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமை செயலாளர் முருகானந்தம், சமூகநலத்துறை செயலாளர் ஜெய முரளிதரன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் சவுமியா சுவாமிநாதன், அரசு உயர் அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இனிமேல் பள்ளிக்கு வருகின்ற குழந்தைகள் பசி காரணமாக வாடிய முகத்துடனும், சோர்வுடனும் இருக்க மாட்டார்கள். புன்னகையும், நம்பிக்கையும், ஆர்வமும், சுறுசுறுப்பும் நிரம்பிய முகங்களைத்தான் இனி பார்க்கப் போகிறோம்
என்ன பலன்கள்
* உணவு உண்ணும் பழக்க வழக்கங்களில் இம்ப்ரூவ்மெண்ட் வந்திருக்கிறது.
* பள்ளிக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.
* பாசிட்டிவான பழக்க வழக்கங்களை வளர்ப்பதில் பிள்ளைகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
* க்ளாஸ் ரூமில் கவனம் மற்றும் ஈடுபாடு அதிகமாகி இருக்கிறது.
* மற்ற குழந்தைகளுடன் ஈசியா, ஜாலியா பழகுகிறார்கள்.
* குழந்தைங்களின் ஹெல்த் டெவலப் ஆகியிருக்கிறது.
* வகுப்பில் தோழமை உணர்வு மேம்பட்டிருக்கிறது என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருக்கிறது.
* பிற மாநிலம், பிற நாடுகளில் கூட காலை உணவு திட்டம் அறிமுகம்
டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2024 வரை, அரசு பள்ளிகளில், குழந்தைகளிடையே ஆரோக்கியம் அதிகரித்திருக்கிறது. ஹாஸ்பிடலுக்கு செல்வதும் குறைந்திருக்கிறது. இன்னும் சொல்கிறேன். காலை உணவு திட்டத்தால், அட்டெண்டன்ஸ் கூடியிருக்கிறது. கற்றல் திறனில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு குறைந்திருக்கிறது. நோய்த்தொற்று வாய்ப்புகள் அதுவும் குறைந்திருக்கிறது. இப்படி, நிறைய பாசிட்டிவாக இருப்பது ஆய்வு மூலமாக நமக்கு தெரிய வந்திருக்கிறது. ஒரு திட்டம் மிக மிகச் சிறப்பானது என்றால், மற்ற மாநிலங்களும் அதை பின்பற்றுவார்கள். அப்படித்தான், காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங்களும், பிற நாடுகளுமே கூட தொடங்கவும், செயல்படுத்தவும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கனடா போன்ற வளர்ந்த மேலை நாடுகளிலும், காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக நாம் இதை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம் என்பது நமக்கெல்லாம் இருக்கின்ற பெருமை என்று முதல்வர் கூறினார்.
* காலை உணவுத்திட்டம் பஞ்சாபிலும் செயல் வடிவம் பெறும் நன்னாளினை ஆவலுடன் நோக்கியுள்ளேன்
காலை உணவு திட்டம் பஞ்சாபிலும் செயல்வடிவம் பெறும் நன்னாளினை ஆவலுடன் நோக்கியுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் காலை உணவுத் திட்டம், மாநில எல்லைகளையும் தாண்டி பலரையும் ஈர்ப்பது தொடர்கிறது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்காக அவருக்கு என் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இங்கு இத்திட்டத்தின் தாக்கத்தை கண்ட பின்னர், தனது பஞ்சாப் மாநிலத்திலும் இதேபோன்ற திட்டத்தைத் தொடங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும், அதுகுறித்து கலந்தாலோசனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கும் நமது நன்றிகள்! அவரது சொற்கள் மகிழ்ச்சியாலும் பெருமித உணர்வாலும் என் நெஞ்சத்தை நிறைக்கின்றன. பஞ்சாபிலும் இத்திட்டம் செயல்வடிவம் பெறும் நன்னாளினை ஆவலுடன் நோக்கியுள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* முதல்வரை பார்த்ததும் குழந்தைகள் உற்சாகம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சி சென்னை, மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள், குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சுயஉதவி குழுவினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பேச மேடை அமைக்கப்பட்டு இருந்தது. முதல்வர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தது மற்றும் தலைவர்கள் பேசுவதை மாணவ-மாணவிகள், குழந்தைகள் பார்க்கும் வகையில் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே எல்இடி திரை வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்த திரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்க்கும்போதெல்லாம் பள்ளி குழந்தைகள் உற்சாகமாக குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.