Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

‘அப் கி பார்...சாக்கோ பார்...’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்

சென்னை: ‘அப் கி பார், சாக்கோ பார்’ என்ற கோஷம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் மோடி, பா.ஜ. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்தார். அதிலும் குறிப்பாக, பிரதமர் மோடி தி.நகரில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ மூலம் பிரசாரம் மேற்கொண்டார்.

அதுபோலவே, பாஜ தொண்டர்களும், தங்களால் முடிந்தவரை என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த பாஜ பிரமுகர் ஒருவர், ஒரு படி மேலே சென்று மோடியை சந்தோஷப்படுத்த ‘‘அப் கி பார்… சாக்கோ பார்” என முழக்கமிட்டார். இதனை தொடர்ந்து மற்ற பாஜ பிரமுகர்களும், இந்தி வாசகம் புரியாததால், “அப் கி பார்.. சாக்கோ பார்...” என உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர். மேலும், கூட்டத்தில் இருந்த பாஜ தலைவர்களும் என்னதான் சொல்றாங்க... என்பதை கூட கேட்காமல் ஆஹா, என்னம்மா கூவுறாண்டா.. கூவு ராசா கூவு என்பது போல் தொண்டர்களை குஷிப்படுத்தியவாறே இருந்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் மத்தியில் பெரும் சிரிப்பலையை கொண்டுவந்துள்ளது. சாக்கோ பார் என்பது ஒரு வகை ஐஸ் கிரீம் என குழந்தைகளுக்கு கூட தெரியும். இதுகூடவா பா.ஜ. தொண்டர்களுக்கு தெரியவில்லை என இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள். அதாவது, அப் கி பார்… சார் சௌ பார்” என்று வட மாநிலங்களில் பாஜ தொண்டர்கள் முழக்கமிட்டு வந்தனர். ‘அப் கி பார்…’ என்றால் ‘இந்த முறை’, ‘சார் சௌ பார்’ என்றால் ‘நானூறுக்கு மேல்’. ”இந்த முறை…”, “நானூறுக்கு மேல்” என்றுதான் வடமாநிலங்களில் முழக்கமிட்டனர்.

ஆனால், இதில் ‘சார் சௌ பார்’ என்பதற்கு பதிலாக, ‘சாக்கோ பார்’ என்று முழக்கமிட்டனர். ‘சாக்கோ பார்’ என்றால் என்னவென்று தெரிந்தே முழக்கமிட்டார்களா அல்லது ‘சார் செள பார்’ என்பதை மறந்து ‘சாக்கோ பார்’ என்று முழக்கமிட்டார்களா..? என்பது தெரியவில்லை. ‘சாக்கோ பார்’ என்பது ஒரு வகை ஐஸ் கிரீம் என்பது கூடவா பா.ஜ. தொண்டர்களுக்கு தெரியவில்லை என நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.

மேலும், இந்தி பேசும் மாநிலங்களில் கூட சாக்கோ பார் என்று கலாய்த்து வருகின்றனர். இதனால் கடந்த சில தினங்களாக அப் கி பார்... சார் சௌ பார் என்ற கோஷத்தை கைவிட்டு விட்டார்களாம். எல்லாம் தமிழகத்தில் எழுந்த கோஷம்தான்.