Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உபியில் 3 முறை முதல்வர் மோடி பாஜவை ஆரம்பித்தது அமித் ஷா: திண்டுக்கல் சீனிவாசன் உளறல்; பக்கத்தில் நின்ற நயினார் பதறல்

திண்டுக்கல்: உத்தரப்பிரதேசத்தில் 3 முறை முதலமைச்சராக மோடி இருந்தார், பாஜவை ஆரம்பித்தது அமித் ஷா என நயினார் நாகேந்திரனை அருகில் வைத்துக் கொண்டு திண்டுக்கல் சீனிவாசன் பேசியதைக் கேட்டு பாஜவினர் அதிர்ந்து போயினர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் பாஜ சார்பில் தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம் பிரசாரம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பிரசாரத்தின்போது திண்டுக்கல் சீனிவான் தனது வழக்கமான பாணியில் உளறி கொட்டினார்.

அவர் பேசுகையில், ‘‘3 முறை முதலமைச்சராக உத்தரப்பிரதேசத்தில் மோடி இருந்தார்’’ என்றார். மோடி முதலமைச்சராக 3 முறை இருந்தது குஜராத்தில் தான். தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன், ‘‘இன்று எந்த நாட்டிற்கு சென்றாலும் என்பதற்கு பதில் எந்த உலகத்திற்கு சென்றாலும்...’’ என குறிப்பிட்டு பேசினார். அதன்பின், திண்டுக்கல் சீனிவாசன், அமித்ஷா பெயரை மறந்து விட்டு அருகில் நின்ற நயினார் நாகேந்திரனிடம் கேட்டு விட்டு, பேசும்போது, ‘‘அமித்ஷா ஜி இந்த கட்சியை ஆரம்பிக்கும் போது...’’ என ஆரம்பித்தார். அதாவது பாஜவை ஆரம்பித்தவர் அமித்ஷா என பேசினார்.

தொடர்ந்து அவர், ‘‘அமித் ஷா கட்சியை ஆரம்பிக்கும்போது தம்பி நயினார் நாகேந்திரன்...’ என்றவர் சற்றுத் தடுமாறி, அவரிடமே கேட்டு ‘‘எல்.முருகன், அண்ணாமலை போன்றவர்களை வைத்து கொண்டு...’’ என ஏதோ சொல்ல வந்தவர் திடீரென பேச்சை நிறுத்தி கொண்டு, ‘‘நேரிடையாக சொன்னால் பாஜவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து இருக்கிறோம். எங்களது கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இதை சொன்னவர் அமித்ஷா’’ என்றார்.

திண்டுக்கல் சீனிவாசனின் தொடர்ச்சியான தவறான பேச்சுகளால் அருகில் இருந்த நயினார் நாகேந்திரன் அதிர்ந்து போய், பக்கத்தில் இருந்து அவரது காதை அடிக்கடி கடித்து கொண்டே இருந்தார். பாஜ கட்சி தொடங்கி 7 ஆண்டுகளுக்கு பின்பே அமித்ஷா பாஜவில் இணைந்தார். ஆனால், பாஜவை தொடங்கியது அமித்ஷா என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியது கண்டு பாஜவினர் அதிர்ந்து போயினர்.

* அதிமுக கொடி கட்டிய காரில் நயினார் பிரசாரம்

பிரசாரத்தின்போது பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திண்டுக்கல்லில் இருந்து சாலை மார்க்கமாக வத்தலக்குண்டுவிற்கு வந்தார். அப்போது அவர் அதிமுக கொடி கட்டிய ஓபன் டாப் காரில் எழுந்து நின்றபடி பிரசாரம் செய்ய வந்தார். இதை கண்ட பாஜவினரிடையே சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் காளியம்மன் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி நயினார் நாகேந்திரன் பேசி விட்டுச் சென்றார்.