புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்சில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, 2 இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த முப்பது வயதான ஷாஜாதிகான் என்ற பெண், 4 மாதக் குழந்தையைக் கொன்றதாகக் கூறப்படும் குற்றத்திற்காக ஐக்கிய அரபு எமிரேட் நீதிமன்றத்தால் கடந்த மாதம் தூக்கிலிடப்பட்டார்.
அதே போல் கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த ரினாஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாகக் கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு தூக்கிலிடப்பட்டார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்டப்படி தூக்கிலிடப்பட்ட ஷாஜாதி கான் மற்றும் முகமது ரினாஷ் அரங்கிலோட்டு உடல்கள் நேற்று அவர்களது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விதிமுறைகளைப் பின்பற்றி அவர்களது அடக்கம் செய்யப்பட்டதாக ஒன்றிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட குடும்ப பிரதிநிதிகளுக்கு உதவியதுடன் இறுதிச் சடங்குகளிலும் கலந்துகொண்டனர்.