Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் 18 சதவீத ஜிஎஸ்டியால் மதுரையில் ‘மங்கும்’ பாத்திர வியாபாரம்: 50% வரை தொழில் பாதிப்பு என வியாபாரிகள் வேதனை

மதுரை: ஒன்றிய பாஜக அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தியது. நம் நாட்டில் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு ஆரம்பம் முதலே பொருளாதார வல்லுநர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அதனை ஒன்றிய பாஜ அரசு பொருட்படுத்தாமல் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. இதன்விளைவாக நாட்டில் தொழில்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதேபோல வியாபார நகரமான மதுரையில் ஜிஎஸ்டி வரியின் தாக்கம் இல்லாமல் இல்லை. இங்கு பல்வேறு பொருட்கள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் விற்கப்படுகின்றன. மதுரை மட்டுமன்றி தென்மாவட்ட மக்களும் பலவகைப் பொருட்களை வாங்குவதற்கு நான்மாட கூடலில் குவிகின்றனர். இதில் பித்தளை, சில்வர் பாத்திரங்கள் வியாபாரம் முக்கிய இடம் வகிக்கிறது.

முன்பெல்லாம் பாத்திரம் வாங்க வேண்டும் என்றால் மதுரை கீழஆவணி மூலவீதியில் உள்ள புதுமண்டபம்தான் முதலில் பொதுமக்களின் நினைவுக்கு வரும். ஆனால், பழமையான புதுமண்டபத்தின் தொன்மை பாதுகாக்கப்பட வேண்டும் எனக்கூறி அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு மாற்றாக பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் அதே பகுதியில் ரூ.7.13 கோடி செலவில் குன்னத்தூர் சாம்பையன் சத்திரம் 160 கடைகளுடன் கட்டப்பட்டது. இந்த கட்டடம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து புதுமண்டபத்தில் இருந்த கடைகள் அனைத்தும் படிப்படியாக குன்னத்தூர் சத்திரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. இங்கு பாத்திரங்கள் மட்டுமன்றி அலங்காரப் பொருட்கள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள், துணிக்கடை, தையல் கடைகளும் உள்ளன.

கடைகள் மாற்றப்பட்டதால் ஏற்கெனவே வியாபாரம் பாதித்துள்ள நிலையில் ஜிஎஸ்டி வரி தங்களை மேலும் பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது குறித்து பித்தளை பாத்திர வியாபாரி சுல்தான் ஜலீல் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்து சுமார் 7 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த வரிவிதிப்பு முறையால் பாத்திர வியாபார தொழில் 50 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. பாத்திரம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்கு 12 சதவீதம் வரி, உற்பத்தி வகையில் 6 சதவீதம் வரி என மொத்தம் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியாக தரவேண்டியுள்ளது. இதனால் உற்பத்தி செலவு அதிகரித்து லாபம் குறைந்துவிட்டது. மற்றொருபுறம் பாத்திரம் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கான கூலியும் உயர்ந்துவிட்டது. தற்போது ஒரு கிலோ பித்தளை பாத்திரம் ரூ.700 முதல் ரூ.800 வரையிலும், தாமிர பாத்திரம் ஒரு கிலோ ரூ.900 முதல் ரூ.1100 வரையிலும் விற்கப்படுகிறது. இளம் தலைமுறையினரிடம் பித்தளை பாத்திரங்கள் வாங்குவதில் போதிய ஆர்வம் இல்லை.

இதனால், வியாபாரம் குறைந்துள்ள நிலையில் கிராம மக்கள்தான் ஓரளவு பித்தளை, சில்வர் பாத்திரங்களை வாங்குகின்றனர். ஜிஎஸ்டி வரியால் அந்த வியாபாரமும் பாதிக்கப்படுகிறது’ என்றார். பாத்திர வியாபாரி தங்கப்பாண்டி: ஜிஎஸ்டி வரியால் அனைத்து வியாபாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதே நிதர்சனம். பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய அரசு சிறு வியாபாரிகளை வஞ்சிக்கிறது. ஜிஎஸ்டி-யில் காம்பவுண்ட் வரிமுறையில் நாங்கள் வியாபாரம் செய்கிறோம். இந்த முறையில் மக்களிடம் நேரடியாக வரி வசூலிக்க முடியாது. இதனால், லாபத்தை குறைத்து விற்பதால் பாதிப்புகளை சந்திக்கிறோம். மேலும், பாத்திர தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இது எங்களது வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது என்றார்.