Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏமனில் நாளை மரண தண்டனை கேரள நர்ஸ் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது: கைவிரித்தது ஒன்றிய அரசு

புதுடெல்லி: கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா (38) ஏமன் நாட்டில் அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து மருத்துவமனை நடத்தி வந்தார். கடந்த 2017ல் பிரியா போதை மருந்து கொடுத்து தலாலை கொலை செய்ததாகவும் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி நிலத்தடி தொட்டியில் மறைத்ததாகவும் கைது செய்யப்பட்டார். சனா சிறையில் அடைக்கப்பட்ட பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், பிரியாவை காப்பாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது ஒன்றிய அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி ஆஜராகி தகவல் தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘இந்திய குடிமக்களை காப்பாற்றவே அரசு விரும்புகிறது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டது. இனியும் அரசு எதுவும் செய்ய முடியாது. குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் சென்று நிலைமையை சிக்கலாக்க அரசு விரும்பவில்லை.

ஏனெனில் உலகின் மற்ற பகுதிகளை போன்றது அல்ல ஏமன். அங்கு என்ன நடக்கிறது என்பதை அரசு அறிந்து கொள்ள எந்த வழியும் இல்லை. தற்போதுள்ள ஒரே வழி பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள நர்ஸின் குடும்பத்தினர் நஷ்டஈடு கொடுப்பது மட்டுமே உள்ளது’’ என்றார். அதே சமயம், கேரள நர்ஸின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.