Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் கீழடியில் ஒன்றுமில்லை என்றவரிடம் ஆய்வறிக்கை கேட்கிறது ஒன்றிய அரசு

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி நடந்தது. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த அகழாய்வின்போது 5,765க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த அரிய வகைப் பொருட்கள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது 982 பக்க அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அளித்தார்.

இதில், கலாச்சாரம், விவசாயம், விலங்குகள், நகர நாகரிகம் உள்ளிட்டவை குறித்து ஆவண, ஆதாரத்துடன் கூறியிருந்தார். கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் முறையில் பகுப்பாய்வு செய்ததில், இவை கிட்டத்தட்ட 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதியானது. அவரது அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிடாமல் இழுத்தடித்த நிலையில், அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்ததையடுத்து, அறிக்கையில் திருத்தம் தேவை எனக் கூறி ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது.

இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயல் தமிழ் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கீழடியில் 3ம் கட்ட அகழாய்வு பணிக்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீராமன், ‘‘2 மாதங்களில் குறிப்பிடும்படியாக கீழடியில் ஒன்றும் கிடைக்காததால், மேற்கொண்டு அகழாய்வு நடத்தத் தேவையில்லை’’ என ஒன்றிய அரசுக்கு தெரிவித்திருந்தார். அவர் கடந்த 2019ல் ஓய்வு பெற்றிருந்தார்.

தான் ஆய்வு மேற்கொண்ட கீழடி மற்றும் ஈரோடு மாவட்டம் கொடுமணல் குறித்த அகழாய்வு அறிக்கையை அளிக்க அனுமதி கோரி இந்திய தொல்லியல் துறைக்கு கடிதம் அளித்திருந்தார். அதை ஏற்று கீழடி மற்றும் கொடுமணல் அகழாய்வு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு இந்திய தொல்லியல் துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. அகழாய்வு நடத்த தேவையில்லை என தொல்லியல் துறைக்கு அறிக்கை கொடுத்தவரிடமே, ஒன்றிய அரசு அறிக்கை கேட்பது கீழடி அகழாய்வில் ஒன்றும் இல்லையெனக் கூறி இழுத்து மூடி மறைப்பதற்கான அரசியலே என தொல்லியல் அறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.