காப்பீட்டுத்துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சென்னை: சிறப்பாக செயல்படும் எல்ஐசிக்கு போட்டியாக காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு செய்யும் திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு கைவிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் வகையில் இன்சூரன்ஸ் சட்டங்களை திருத்தும் மசோதா கொண்டு வரப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
இதன்மூலம் ஆயுள் காப்பீட்டுத்துறையின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்படுவதோடு அன்னிய நிறுவனங்களுக்கு கதவை திறந்து விடப்படுவதன் மூலம் காப்பீட்டுத்துறை மீது மக்களின் நம்பகத்தன்மையை இழக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டால் தற்போது ஆயுள் காப்பீட்டு கழகத்தில் ஒன்றிய அரசின் கண்காணிப்பு இருப்பதைப் போல அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் செயல்படுகிற நிறுவனங்களை கண்காணிக்க முடியாது.
அதனால் மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளிலிருந்து காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். எனவே, மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு போட்டியாக காப்பீட்டுத் துறையில் 100 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை உடனடியாக ஒன்றிய கைவிட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


