Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒரே பதிவால் ஆடிப்போன ஒன்றிய நிதியமைச்சகம்; ஜிஎஸ்டி பதிவு எண் பெறுவதற்கு குற்றம் செய்ய வேணுமா?: விமர்சனங்கள் எழுந்ததால் நிர்மலா சீதாராமன் தலையீடு

புதுடெல்லி: ஜிஎஸ்டி பதிவு எண் பெறுவதற்கு குற்றம் செய்ய வேண்டுமா? என்று நிறுவன இயக்குனர் கேள்வி எழுப்பிய நிலையில், பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையிட்டு கருத்து தெரிவித்துள்ளார். ெடல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விஜி லேர்னிங் டெஸ்டினேஷன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் வினோத் குப்தா என்பவர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாளை நான் ஒரு குற்றம் செய்யப் போகிறேன்.

எனது மனைவி மற்றும் மகள்கள் பங்குதாரர்களாக உள்ள ஒரு நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி பதிவு எண் பெறுவதற்காக கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தேன். அந்த விண்ணப்பத்தில் பல்வேறு ஆட்சேபனைகள் எழுந்ததால், இதுவரை என்னால் ஜிஎஸ்டி எண்ணைப் பெற முடியவில்லை. லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் குற்றமாகும். ஆனால், நாளை நான் ஜிஎஸ்டி எண்ணைப் பெற குற்றம் செய்ய வேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை ஒரு எக்ஸ் பயனர் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘ஜிஎஸ்டி எண்ணை ஒருவர் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களையும், அங்கு நடக்கும் லஞ்சத்தையும் சிபிஐசி (மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்) கவனிக்கவில்லை. மூத்த அதிகாரிகள் இதைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார். இதேபோல் பலரும் சிபிஐசி குறித்தும், ஒன்றிய நிதியமைச்சகம் மற்றும் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இவ்விவகாரம் பூதாகரமாக மாறியதால் வினோத் குப்தாவின் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை விளக்கி, சிபிஐசி தனியாக பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘வினோத் குப்தாவின் விண்ணப்பம் கடந்த மே 26 அன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து விசாரிக்க டெல்லி மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இவ்விசயத்தில் மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு சம்பந்தம் இல்லை. அவர் தாக்கல் செய்த விண்ணப்பத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவரின் பதவி குறித்த தகவல் இல்லாததால், கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதற்கு வரி செலுத்துவோரிடமிருந்து பதில் காத்திருக்கிறது’ என்று சிபிஐசி கூறியது. மேலும், உண்மைகளை அறியாமல் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று பயனரை வலியுறுத்தியது.

இவ்வாறாக மாறி மாறி கருத்துகளை கூறி வந்த நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரது தனது பங்கிற்கு சிபிஐசி-யின் பதிவை மேற்கோளிட்டு, ‘வெளிப்படைத்தன்மையும், நேர்மையும், வரி செலுத்துவோரின் நம்பிக்கையையும் பெறுவது முக்கியம். இந்த விஷயத்தில் சிபிஐசி விரிவான பதிலை அளித்துள்ளது. வரி செலுத்துவோருக்கு சேவை செய்யும்போது வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் முக்கியம் என்று தாங்கள் உறுதியாக நம்புகிறோம். சிபிஐசி வாரியமும் அதன் பணியாளர்களும் உணர்வுப்பூர்வமாகவும் பொறுப்புடனும் செயல்படுவார்கள்‘ என்று அவர் தனது பதிவில் தெரிவித்தார்.