Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்க ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவு!!

டெல்லி : ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்கும்படி ரயில்வே வாரியத்திற்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.பாதுகாப்பான பயணம் என்ற அடிப்படையில் பலரும் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொண்டு குறிப்பிட்ட நாளில் தாங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு பயணிகள் பயணித்து வருகின்றனர். இதனிடையே ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்த பயணிகளின் இறுதி அட்டவணை தயாரித்து வெளியிடப்படுகிறது. இதனால், காத்திருப்போர் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் இடம் கிடைக்காத பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்க ரயில்வே வாரியம் ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை வழங்கியது. இதனை ஏற்றுக் கொண்ட ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்கும் பணியை படிப்படியாக தொடங்க உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், பகலில் 2 மணிக்கு முன்பாகவே புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு இறுதி அட்டவணை முந்தைய நாள் இரவு 9 மணிக்கே தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நாளையே அமலுக்கு வர வாய்ப்புள்ளது.