Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேவைக்கு ஏற்ப மின்விநியோகம்; மாநிலம் முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: மின்சாரத்தேவை மற்றும் மின்விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை என்றும் மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24X7 இயங்கி வரும் மின்நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தற்போது நிலவி வரும் கடும் கோடை வெப்பம், பல்வேறு மாவட்டங்களில் கடும் சூறாவளி காற்று மற்றும் பெய்து வரும் கனமழை காரணமாக மின்னகத்தில் பதிவான மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வுமேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரிசெய்யுமாறும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். மாநிலத்தின் மின்சாரத்தேவை மற்றும் மின்விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய கோடைகால மின் தேவை மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம் எடுத்துள்ளது.

மின்விநியோகம் சார்ந்த குறைபாடுகளை சரிசெய்ய 24 மணிநேரமும் செயல்படும் தொலைபேசி சேவை மின்னகத்தை 94987 94987ல் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு அமைச்சர் கூறினார். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு மின் பகிர்மானக்கழக தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் அனீஷ்சேகர், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.