Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ₹41 கோடியில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி

*காணொலியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி : அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.41 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் பணியை பிரதமர் நரேந்திரமோடி, காணொலி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 554 ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், நவீனமயப்படுத்துதல் மற்றும் 1,500 சாலை மேம்பாலம், அடிப்பாலம் அமைக்கும் திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி நேற்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதில் மதுரை கோட்டத்தில் 14 ரயில் நிலையங்களை புனரமைக்கும் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இதன் ஒரு பகுதியாக ரூ.12 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி ரயில் நிலையம், ரூ.12.72 கோடியில் கோவில்பட்டி ரயில் நிலையம் மற்றும் ரூ.17.5 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதையொட்டி தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மதுரை முதுநிலை கோட்ட பொறியாளர் பிரவீனா தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார். அம்ரித் பாரத் திட்டத்தில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் ஓய்வறை, நவீனப்படுத்தப்பட்ட ரயில்வே அலுவலகங்கள், பயணிகளின் பொருட்கள் பாதுகாப்பு அறை, நவீன வசதியுடன் கூடிய கழிப்பறை வசதிகள், நடைமேடை, நடைபாதை, வாகன நிறுத்துமிடம், மின்தூக்கி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளோடு நவீனமயமாக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை கோட்ட உதவி பொறியாளர் முத்துக்குமார், தூத்துக்குடி ரயில் நிலைய மேலாளர் ராஜேஷ், வர்த்தக ஆய்வாளர் நடராஜன், திமுக, பாஜ நிர்வாகிகள், ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், ரயில்வே நிர்வாகிகள், ஊழியர்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மதுரை ரயில்வே கோட்ட முதுநிலை பொறியாளர் கார்த்திக் தலைமை வகித்தார். விழாவில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, நகராட்சி சேர்மன் கருணாநிதி, ரயில்வே வர்த்தக பிரிவு மேற்பார்வையாளர் கோவிந்தராஜ், பாஜ வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்ரித் பாரத் திட்டத்தில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உள்ள முதல் நடைமேடையில் மின் தூக்கி, நகரும் படிக்கட்டு, புதிய நுழைவாயில், நுழைவாயில் ஆர்ச், கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், பயணிகள் சீட்டு வழங்கும் அறையுடன் கூடிய புதிய கட்டிடம், பயணிகள் தகவல் மையம், ரயில்கள் வருகை குறித்த டிஜிட்டல் போர்டுகள், ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை குறிக்கும் டிஜிட்டல் போர்டுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை நகராட்சி தலைவர் சிவஆனந்தி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தென்னக ரயில்வே மூத்த கோட்ட வணிக மேலாளர் கணேசன், பயிற்சி டிப்போ அதிகாரி அனோஜ் ரத்தோர், வணிக ஆய்வாளர் அரவிந்த், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் ரமேஷ், ஆணையாளர் கண்மணி, நகராட்சி கவுன்சிலர்கள் சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, முத்துஜெயந்தி, லீலா, மஞ்சுளா, அந்தோணி ட்ரூமன், ஆனந்த ராமச்சந்திரன், சுதாகர், ஆறுமுகம், முத்துகிருஷ்ணன், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பயணிகள் காத்திருக்கும் அறை, மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் மற்றும் தங்கும் அறைகள், லிப்ட், இருசக்கர, 4 சக்கர வாகன நிறுத்தம், நவீன வசதியுடன் சுகாரதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ‘வளர்ந்த இந்தியா, வளர்ந்த ரயில்வே 2047' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி விழாவில், தாய்லாந்தில் நடந்த சர்வதேச சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவி தாரகை, சிலம்ப ஆசிரியர் பூவரசன், குளோபல் உலக சாதனையில் 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றிய மாணவி அகிரா சண்முகஸ்ரீ, நல்லாசிரியர் சுரேஷ் குமார் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதனை பொதுமக்கள் மற்றும் பயணிகள் பார்த்தனர். ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

‘‘தூத்துக்குடியில் புதிய ரயில்வே மேம்பாலங்கள்''

தூத்துக்குடி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: ‘தூத்துக்குடி பல்வேறு வரலாற்று புகழ்மிக்கது. நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரனார், பாரதியார் போன்றவர்கள் வாழ்ந்த மண் இது. அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி ரயில் நிலையம் ரூ.12 கோடியில் நவீனமயமாவது மகிழ்ச்சி. இத்திட்டத்திற்கு மோடிக்கு நன்றி. அதே நேரத்தில் தூத்துக்குடிக்கு தொடர் திட்டங்களை பெற்றுத்தர ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடியில் இருந்து பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல சரக்கு ரயில்களின் தேவை அவசியமானது. தூத்துக்குடிக்கு பயணிகள் ரயில் கூடுதலாக தேவை. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒரு ரயிலும், தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரு ரயிலும் இயக்க வேண்டும். நெல்லை -பாலக்காடு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி 3ம்கேட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதேபோல் 4ம்கேட்டிலும் மேம்பாலம் அமைக்க வேண்டும். மடத்தூர் ரோட்டில் ஒரு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். இத்திட்டங்களை நிறைவேற்றிட ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.