Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அணுகுண்டை சுமந்து செல்லும் விமானங்கள் உட்பட 40 ரஷ்ய விமானங்களை தீக்கிரையாக்கிய உக்ரைன்: இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் பதற்றம்

மாஸ்கோ: அணுகுண்டை சுமந்து செல்லும் விமானங்கள் உட்பட 40 ரஷ்ய விமானங்களை ‘ட்ரோன்’ மூலம் உக்ரைன் ராணுவம் அழித்த நிலையில், இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது.  ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய போரானது கடந்த 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷ்யாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுகமாக உதவி செய்து வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், ரஷ்யா மீது இதுவரை இல்லாத வகையில் உக்ரைன் நேற்று முதல் தீவிர தாக்குதலை தொடுத்துள்ளது. ரஷ்யாவின் முர்மான்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமூர் ஆகிய ஐந்து விமானத் தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் குறைந்தபட்சம் 40 ரஷ்ய விமானங்கள் சேதமடைந்ததாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இவற்றில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய டியூ-95 மற்றும் டியூ-22 ஆகிய குண்டுவீசும் விமானங்களும் அடங்கும். ஆனால், ரஷ்யா தரப்பில், இவானோவோ, ரியாசான் மற்றும் அமூர் பகுதிகளில் உக்ரைனின் தாக்குதல்கள் தடுக்கப்பட்டதாகவும், முர்மான்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்க் பகுதிகளில் சில விமானங்கள் தீப்பிடித்ததாகவும், உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தது. இந்தத் தாக்குதல்களில் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள பெலயா விமானத் தளத்திற்கு அருகிலுள்ள ஸ்ரெட்னி கிராமத்தில் அமையப்பட்டுள்ள ராணுவ முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன்படி, கிழக்கு சைபீரியாவில் உள்ள விமான தளம் ஒன்றின் மீது உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் கடுமையாக தாக்குதல் நடத்தின. இது எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ளது. இதேபோன்று ஸ்ரீத்னி என்ற கிராமத்தில் அமைந்த ராணுவ பிரிவின் மீதும் உக்ரைன் தாக்கியது. சைபீரியாவின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும். இது போரில் முதன்முறையாக ரஷ்யாவுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிர தாக்குதலாகும்.  இந்தத் தாக்குதல்கள், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இரண்டாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தைகள் இஸ்தான்புல்லில் இன்று (ஜூன் 2) தொடங்கவிருக்கும் நிலையில் நடந்துள்ளன.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இஸ்தான்புல் பேச்சுவார்த்தைகளுக்கு தனது பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமையிலான குழுவை அனுப்புவதாகவும், நிபந்தனையற்ற போர் நிறுத்தம், கைதிகள் மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகளின் விடுதலை ஆகியவற்றை முன்னுரிமைகளாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை அணுகுவதாகவும் தெரிவித்தார். ரஷ்யா தரப்பில் கிரெம்ளின் ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான குழு இஸ்தான்புல்லுக்கு ஏற்கனவே சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* 18 மாதமாக நடந்த வியூகம்

‘பாவுட்டினா’ (ஸ்பைடர் வெப்) என்ற பெயரில் 18 மாதங்களாக திட்டமிடப்பட்டு, ரஷ்யா மீது உக்ரைன் தீவிர தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள், மரத்தாலான நகரக்கூடிய குடில்களில் மறைத்து வைக்கப்பட்டு, சரக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டன. தாக்குதல் நேரத்தில், இந்த வாகனங்களின் கூரைகள் தொலைவிலிருந்து திறக்கப்பட்டு, ட்ரோன்கள் வெளியேறி விமானத் தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவுக்கு 7 பில்லியன் டாலர் (தோராயமாக 5.2 பில்லியன் பவுண்ட்) மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

* 1,194வது நாளை எட்டிய போர்

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் இன்றுடன் 1,194வது நாளை எட்டியுள்ள நிலையில், சைபீரியா எல்லை வரை இருக்கும் ரஷ்ய விமானப்படை தளங்களை உக்ரைன் ராணுவம் ட்ரோன் மூலம் அழித்தது. ஒரே நேரத்தில் பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் ரஷ்யா நிலைகுலைந்துள்ளது. ரஷ்யாவின் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘இந்த தாக்குதலில் ராணுவ வீரர்களோ, பொதுமக்களோ உயிரிழக்கவில்லை. ஒரே இரவில் 472 ட்ரோன்களை உக்ரைன் ஏவியது. இந்த போரின் அதிகபட்ச இரவு நேர தாக்குதலாகும். ரஷ்யாவும் உக்ரைன் மீது ஏழு ஏவுகணைகளை ஏவியது. இந்த தாக்குதலில் 12 வீரர்கள் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கிடையில், ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள பாலத்தின் வழியாக சென்ற பயணிகள் ரயில் மீது பாலம் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் பலியாகினர். 69 பேர் காயமடைந்தனர்.