Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

யுஜிசி நுழைவுத்தேர்வு முறையால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும்: திருவனந்தபுரம் தேசிய மாநாட்டில் அமைச்சர் கோவி. செழியன் பேச்சு

சென்னை: யுஜிசி 2025ம் ஆண்டுக்கான வரைவு நெறிமுறைகளின் படி, நுழைவுத் தேர்வு முறை கொண்டு வந்தால் உயர்கல்வியில் மாணவ மாணவியரின் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கூறினார். யுஜிசி வரைவு நெறிமுறைகள் - 2025 குறித்த தேசிய மாநாடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. அதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு பேசியதாவது: யுஜிசி சட்டம், 1956-ன் பிரிவு 26-ன் கீழ் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு வெளிட்ட இந்த நெறிமுறைகள் மாநிலப் பல்கலைக்கழகச் சட்டங்களை செயல்பாடற்றதாக ஆக்கும் நோக்கம் கொண்டது. யுஜிசி உயர்கல்வியில் தரநிலைகள் குறித்து ஆலோசனை கூறலாம். ஆனால், அது மாநிலங்களை கட்டாயப்படுத்தி அமல்படுத்த முடியாது.

உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. சமீபத்திய பட்ஜெட்டில், தமிழ்நாடு ரூ.8,212 கோடிகளை ஒதுக்கியது. இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒன்றிய அரசின் மொத்த ஒதுக்கீட்டில் 17% ஆகும். மாநில அரசுகளின் முறையான ஆலோசனை இல்லாமல் கல்வி முறையில் புதிதாக விதிகளை சுமத்துவது நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தற்போது மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) உட்பட அனைத்து பள்ளி வாரியங்களும் ஏற்கனவே பல தேர்வுகள் மற்றும் பொது தேர்வுகள் மூலம் மாணவர்களை மதிப்பீடு செய்கின்றன. அதிக போட்டி நிறைந்த நுழைவுத் தேர்வுகள், தற்போதுள்ள தேர்வுகளை அர்த்தமற்றதாக்கி, மாணவர்களுக்கு மனச்சுமையை ஏற்படுத்தும். ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை மற்றும் பல நுழைவு மற்றும் பல வெளியேறுதல் (எம்இஎம்இ) கல்வி முறையை சீர்குலைக்கும்.

மாநில அரசுகளுக்கு எதிரான இந்த நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஜனநாயக முறையில் உயர்கல்வியை உருவாக்க மாநிலங்களுடன் இணைந்து செயல்படுமாறும் ஒன்றிய அரசை தமிழ்நாடு வலியுறுத்துகிறது.

இந்த நெறிமுறைகளுக்கு அடிப்படையான தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தவில்லையெனில் கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை வழங்க இயலாது என ஒன்றிய அமைச்சர் தெரிவித்திருப்பது அகம்பாவத்தின் உச்சம். மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என்று பிளாக்மெயில் செய்வதை தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் எச்சரித்துள்ளார். இவ்வாறு கோவி. செழியன் பேசினார்.