Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உடுமலை பள்ளி தாளாளர் மகள் பலி: உடலை பார்த்து பெற்றோர் கதறல்

உடுமலை: ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உடுமலையை சேர்ந்த பள்ளி தாளாளரின் மகளான சாப்ட்வேர் இன்ஜினியர் பலியானார். சொந்த ஊர் வந்த ஒரே மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இதையொட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். இவர்களில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் காமாட்சி தேவியும் (27) ஒருவர்.

இவர் உடுமலையில் திருப்பூர் ரோடு ஏரிபாளையம் விஜி ராவ் நகர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (65), ராஜலட்சுமி (60) தம்பதியின் ஒரே மகள் ஆவார். மூர்த்தி மடத்துக்குளம் ஒன்றியம் மைவாடி பிரிவு அருகே உள்ள விவேகானந்தா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர். காமாட்சி தேவி பெங்களூரில் உள்ள அமேசான் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்தார். பி.இ. ஐ.டி படித்துள்ளார். இவர் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்த ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க சக நண்பர்களுடன் சென்றார்.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இறந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று உடுமலைக்கு கொண்டுவரப்பட்டது. ஒரே மகளை இழந்த பெற்றோர், காமாட்சி தேவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து மைவாடி பிரிவில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காமாட்சி தேவி உடல் வைக்கப்பட்டது. உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள், உறவினர்கள், உடன் படித்தவர்கள், பணியாற்றியவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை அவரது உடல் உடுமலை மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.