Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரொம்ப ஓவரா போய்டுச்சி... டிரம்ப் மீது விமர்சனம் மன்னிப்பு கேட்டார் மஸ்க்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார். ஆனால் அமெரிக்க அரசின் பட்ஜெட்டில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. இதனால் எலான் மஸ்க் ஏமாற்றம் அடைந்து, டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் காரசாரமாக விமர்சனம் செய்து கொண்டனர். அமெரிக்க அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோதல் காரணமாக 150 மடங்கு லாபத்தில் விற்ற, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 621 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து டிரம்ப் அளித்த பேட்டியில்,’ எலான் மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக நினைக்கிறேன். அவருடன் மீண்டும் பேசும் எண்ணம் எனக்கு இல்லை’ என்றார். இதற்கிடையே இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சிகளும் நடந்தன. இந்த சூழலில் டிரம்புக்கு எதிராக வெளியிட்ட தனது சில பதிவுகளுக்காக நேற்று திடீரென எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,’ கடந்த வாரம் அதிபர் டிரம்ப் பற்றிய எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன். அவை மிகைப்படுத்தப்பட்டுவிட்டன’ என்று குறிப்பிட்டுள்ளார்.