Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழகத்திலேயே முதன்முறையாக அருப்புக்கோட்டை கோயிலுக்கு இயந்திர யானை நன்கொடை: நடிகை திரிஷா வழங்கல்

அருப்புக்கோட்டை: தமிழகத்திலேயே முதன்முறையாக அருப்புக்கோட்டை கோயிலுக்கு நடிகை திரிஷா மற்றும் பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா அமைப்பு சார்பில் 800 கிலோ எடை கொண்ட இயந்திர யானை வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வவிநாயகர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீஅஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு யானை வாங்க நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், அதில் பல சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்து நடிகை திரிஷா மற்றும் ‘‘பீப்பிள் பார் கேட்டில் இன் இந்தியா’’ அமைப்பு சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள கஜா என்ற இயந்திர யானை வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர யானை கேரளாவில் உருவாக்கப்பட்டது. சுமார் 3 மீ உயரம், 800 கிலோ எடை கொண்டது. யானைக்கு கால்களுக்கு பதிலாக சக்கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வீதியுலா செல்லலாம். காதுகள், துதிக்கை, தலை ஆகியவை அசையும் வகையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வகையில் துதிக்கை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அறிமுக நிகழ்ச்சி கோயிலில் நேற்று நடைபெற்றது. பக்தர்கள் மலர் தூவி யானையை வரவேற்றனர். யானைக்கு தீபாராதனையும் நடைபெற்றது. மேலும், யானை கோயிலிலிருந்து ஊர்வலமாக புதிய பஸ்நிலையம், நாடார் சிவன் கோயில், எஸ்பிகே பள்ளி ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு மீண்டும் கோயிலுக்கு வந்தடைந்தது. யானை அறிமுக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்திலேயே முதன்முறையாக அருப்புக்கோட்டை கோயிலில் இயந்திர யானை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.