கல்வியே மாணவர்களின் நிலையான சொத்து.. காந்தி, பெரியார் வழியில் மாணவர்கள் செல்ல வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!!
திருச்சி: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு, அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, 2 நாள் பயணமாக இன்று திருவாரூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலையில் ரோடு ஷோ மேற்கொள்கிறார். அந்தவகையில் சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்ற அவர், அங்குள்ள ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். பவளவிழா ஆண்டின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;
முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து அரசின் பல ஆய்வு கூட்டங்களில் பங்கேற்கிறேன். பல இடங்களுக்கு பயணம் செய்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன். கடந்த மே மாதத்தில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டேன். ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஜமால் முகமது கல்லூரி இருக்கிறது. கல்லூரி நட்பு ஆயுட்காலம் வரை இருக்க வேண்டும் என்றார்.
கோட்சே கூட்டத்துக்கு பின் மாணவர்கள் செல்லக்கூடாது: முதலமைச்சர்
மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்துக்கு பின்னால் சென்றுவிடக்கூடாது. காந்தி வழி, அம்பேத்கர் வழி என நமக்கு பல வழி இருக்கிறது; மாணவர்கள் தவறான வழியில் செல்லக் கூடாது. இளம் மாணவர்களை சந்திக்கும்போது ஒவ்வொரு முறையும் உற்சாகம் அடைகிறேன்.
கல்வியே மாணவர்களின் நிலையான சொத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாணவர்களுக்கு படிப்பு மிகவும் முக்கியம்; அதுதான் உங்களுக்கு நிலையான சொத்து. 2011, 2016ல் ஜமால் முகமது கல்லூரிக்கு யுசிஜி கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.3 கோடி நிதி கொடுத்தது. ஜமால் முகமது கல்லூரியில் படித்த 2 பேர் இன்று மூத்த அமைச்சர்களாக உள்ளனர்
ஓரணியில் நின்றால் தமிழ்நாட்டை வீழ்த்த முடியாது: முதலமைச்சர்
ஓரணியில் தமிழ்நாடு நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசவில்லை மாணவர்களுக்கு அரசியல் புரிய வேண்டும் என்பதற்காக பேசுகிறேன். தகைசால் தமிழராக காதர் மொகிதீன் உயர்ந்து நிற்கிறார். காதர் மொகிதீனுக்கு தகைசால் விருது தருவதில் பெருமை அடைகிறேன்.
கல்விக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கல்விக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கல்விக்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதால் மாணவர்கள், மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குகிறோம். எப்போதும் இளைஞர்களுக்கு திமுக அரசு துணையாக நிற்கும்.
இஸ்லாமியர்களின் உரிமையை காக்கும் அரசு திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இஸ்லாமியர்களின் உரிமையை காக்கும் இயக்கமாக என்றும் திமுக இருக்கும். 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்க உள்ளோம். சமூக நீதி போராட்டத்தின் பலம்தான் இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் நலனை காக்க மாணவர்கள் ஓரணியில் தமிழ்நாடு என்று திரள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


